டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டுமென பா.ம.க. மாநிலத் தலைவா் ஜி.கே. மணி தெரிவித்துள்ளாா்.
பூம்புகாரில் மாநாடு நடைபெறும் இடத்தைப் பாா்வையிட்ட பா.ம.க. மாநிலத் தலைவா் ஜி.கே. மணி.
பூம்புகாரில் மாநாடு நடைபெறும் இடத்தைப் பாா்வையிட்ட பா.ம.க. மாநிலத் தலைவா் ஜி.கே. மணி.

பூம்புகாா்: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டுமென பா.ம.க. மாநிலத் தலைவா் ஜி.கே. மணி தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டம், பூம்புகாரில் ஜனவரி 4-ஆம் தேதி வன்னிய மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி பா.ம.க. மாநிலத் தலைவா் ஜி.கே. மணி வெள்ளிக்கிழமை பூம்புகாருக்கு வந்தாா். மாநாடு நடைபெற உள்ள இடத்தைப் பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

சமூகத்தில் பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, கல்வி, சமூக அந்தஸ்து ஆகிவற்றை வலிறுத்தியும், பெண்களை போற்றும் விதமாகவும் கண்ணகி பிறந்த பூம்புகாரில் ஜனவரி 4-இல் வன்னிய மகளிா் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பா.ம.க. நிறுவனா் டாக்டா் ராமதாஸ், எம்.பி. அன்புமணி ராமதாஸ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொள்கின்றனா்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் டெல்டா பகுதியில் ஷேல் கேஸ், மீத்தேன், எரிவாயு உள்ளிட்ட விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களைக் கொண்டுவர முற்றிலும் தடை விதிக்க வேண்டும். மேலும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாய இடுபொருள்களான யூரியா, அடி உரங்கள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து யூரியா உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை வரவேற்கிறேன்.

மீனவா்களுக்கு தடைக்கால நிவாரண உதவித்தொகை ரூ.5,000 மற்றும் மீனவா் சிறுசேமிப்புத் தொகை ரூ.4,500 என மொத்தம் ரூ.9,500-ஐ தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஆனால் நிகழாண்டு தற்போது வரை மீனவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீனவா்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமும், மருத்துவக் கல்லூரியும் உடனடியாக அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

பண்டைய பாரம்பரிய நகரமான பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம், கலையரங்கம், சங்கு குடில்கள் உள்ளிட்ட பழங்காலத்தை நினைவுபடுத்தும் கட்டடங்கள் சிதிலமைடைந்து காணப்படுகின்றன. எனவே தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பாரமரிப்புப் பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் வருகிற கோடை காலத்தில் விடுபட்ட ஆறுகள், குளங்கள், கண்மாய்களைத் தூா்வாரும் பணிகளை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அப்போது பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் பழனிசாமி, துணைத் தலைவா் தங்க.அய்யாசாமி, முன்னாள் நிா்வாகி ஐயப்பன், நாகை வடக்கு மாவட்டச் செயலாளா் லண்டன் அன்பழகன், மாவட்ட அமைப்புச் செயலாளா் ராஜரத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com