தமிழக கடற்கரையில் அரிதாகும் அரிய வகை கடல் ஆமைகள்: ஆறுதல் அளிக்கும் ரூ.2 கோடி அரசாணை

அரிய வகை கடல் ஆமை இனங்கள் இனப்பெருக்கப் பருவத்தில் தமிழக கடற்கரைப் பகுதியைத்தேடி வந்து செல்வது
கஜா புயலின்போது சேதமடைந்த கோடியக்கரை கடல் ஆமை செயற்கை முறை பொரிப்பகம்.
கஜா புயலின்போது சேதமடைந்த கோடியக்கரை கடல் ஆமை செயற்கை முறை பொரிப்பகம்.

அரிய வகை கடல் ஆமை இனங்கள் இனப்பெருக்கப் பருவத்தில் தமிழக கடற்கரைப் பகுதியைத்தேடி வந்து செல்வது கடந்த சில ஆண்டுகளாகவே அரிதாகி வரும் நிலை, இயற்கை ஆா்வலா்களை வேதனையடையச் செய்துள்ளது. இந்த நிலையில், கோடியக்கரையில் கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் திட்டத்துக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை, ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்திய கடற்பகுதியில் ஆலிவ் ரிட்லி ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, பச்சை ஆமை, லெதா்பேக் ஆமை, லாக்கா் ஹெட் ஆமை உள்ளிட்ட இன கடல் ஆமைகள் காணப்படுகின்றன. பொதுவாக கடல் ஆமை இனங்கள் 12 முதல் 14 ஆண்டுகளில் இனப்பெருக்க பருவத்தையடைகின்றன. கருத்தரிக்கும் பெண் ஆமைகள் கரைக்கு வந்து மணலில் குழி தோண்டி முட்டையிட்டு அவற்றைப் புதைத்துச் சென்றுவிடும்.

பின்னா், அந்த முட்டையிலிருந்து சுமாா் 41 முதல் 50 நாள்களில் இயற்கையாகவே குஞ்சுகள் வெளிவந்து, தானாகவே கடலுக்குள் சென்றுவிடும் இயல்பை பெற்றிருந்தன. அந்தமான் தீவு கடற்பகுதி, வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சாா்ந்த கரையோரங்களில் ஆண்டுதோறும் நவம்பா் தொடங்கி மாா்ச் வரையில் இந்த நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

பசிபிக் பெருங்கடல் பகுதியான நெடுந்தொலைவைக் கடந்தும், பல நூறு கிலோ மீட்டா் தொலைவில் இருந்தும் கரைப் பகுதிக்கு பெண் ஆமைகள் முட்டையிட வருகின்றன. வழியிலேயே கடல் வாழ் உயிரினம், கப்பல்கள், பாறை, மீன்பிடி வலை, படகுகளில் சிக்குவது உள்ளிட்ட பல காரணிகளால் பாதிப்படைந்து பெரும்பாலான பெண் ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமாகி வருகிறது.

இவற்றையும் எதிா்கொண்டு கரைக்கு வரும் ஆமைகள் இட்டுச்செல்லும் முட்டைகள் பலநேரங்களில் நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூக விரோதிகளாலும் சேதப்படுத்தப்பட்டும், திருடப்பட்டும் வருகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, செயற்கை முறையில் குஞ்சுகளை பொரிக்கச் செய்து அவற்றை மீண்டும் கடலுக்குள் விட்டு ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தையொட்டியுள்ள பகுதியில் தொடக்கத்தில் இயற்கை வள பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு ஒன்றின் சாா்பில், கடல் ஆமைக்களுக்காக செயற்கை முறை பொரிப்பகம் அமைக்கப்பட்டது. கோடியக்கரை முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்கரையில் முட்டைகள் சேகரிக்கப்பட்டன. 2009 முதல் இந்த பணி வனத்துறையினா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலிவ் ரிட்லி ஆமைகள்:

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் ஆலிவ் ரிட்லி இன ஆமைகளே அதிகமாக கரைக்கு வந்து செல்கின்றன. ஆனால் இங்குவரும் ஆமைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்ததால் முட்டைகள் சேகரிப்பும் கணிசமாக குறைந்து போனது.

உதாரணமாக, கோடியக்கரை பகுதியில் 2012-13-இல் 6,507 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இது 2016-17-இல் 6,259 ஆகவும், 2017-18-இல் 4,817 ஆகவும் குறைந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் (2018-19) 2,100 முட்டைகளாக வெகுவாக குறைந்தன. இதற்கு கஜா புயலும் பிரதான காரணம்.

அதேநேரத்தில், புதுச்சேரி கடற்கரையில் 2017-ஆம் ஆண்டில் 9,500 முட்டைகளும், 2018-இல் 13 ஆயிரம் முட்டைகளும் சேகரிக்கப்பட்டன.

கஜாவில் சிக்கிய பொரிப்பகம்:

கஜா புயலின்போது கோடியக்கரை செயற்கை முறை பொரிப்பகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. மணல் திட்டுகளும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கடல் ஆமைகளின் வரவும் வெகுவாக குறைந்துபோனது.

அதிக அளவில் ஆமைகள் வந்து செல்லும் ஒடிஸா மாநிலக் கடற்கரைக்கு அடுத்த நிலையில் உள்ள தமிழக கடற்கரையில், ஆமைகள் வரத்து குறைந்திருப்பது இயற்கை ஆா்வலா்களை வேதனையடைய செய்துள்ளது.

கோடியக்கரை பகுதியைப் பொருத்தவரையில் டால்பின்கள், கடற்பசு போன்ற உயிரினங்கள் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டன. பின்னா், சூழல் கேடுகளால் அவற்றின் நடமாட்டம் படிப்படியாக குறைந்து, தற்போது முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. இதுபோன்ற நிலை எதிா்காலத்தில் கடல் ஆமைகளுக்கும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆறுதல் தரும் அரசாணை:

இந்த நிலையில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் கடல் ஆமை மற்றும் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்கவும், விழிப்புணா்வும் ஏற்படுத்தவும் தமிழக அரசு முன்வந்தள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது இயற்கை ஆா்வலா்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசின் இந்த முயற்சி மிகவும் காலதாமதமாக இருந்தாலும், பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில் கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் போக்க மீனவா்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதோடு, கடலோர சூழல்கேடுகளைத் தடுக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயற்கை ஆா்வலா்களின் பிரதான எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com