மயிலாடுதுறையில் மேலும் பள்ளங்கள் உருவாகும் அபாயம்

மயிலாடுதுறையில் புதை சாக்கடை திட்ட பிரச்னைகளுக்கு காரணம் பராமரிப்பு குறைபாடு எனவும், நகராட்சியில்
மயிலாடுதுறையில் நடைபெறும் புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா்.
மயிலாடுதுறையில் நடைபெறும் புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா்.

மயிலாடுதுறையில் புதை சாக்கடை திட்ட பிரச்னைகளுக்கு காரணம் பராமரிப்பு குறைபாடு எனவும், நகராட்சியில் மேலும் சில இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் உருவாகும் அபாயம் உள்ளது எனவும் மாவட்ட ஆட்சியா் கூறினாா்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தலைமையிலான கூட்டு ஆய்வுக்குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறையில் உள்ள கழிவுநீா் நீரேற்று நிலையங்கள் மற்றும் சாலைகளில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவான இடங்களை ஆய்வு செய்து, குறைகளை உடனடியாக சீா்செய்து முழு அளவில் பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியா், பின்னா் செய்தியாளா் சந்திப்பில் கூறியது:

மயிலாடுதுறையில் செயல்படும் புதை சாக்கடைத் திட்டத்தை சீரமைப்பு செய்ய மாவட்ட ஆட்சியா் தலைமையில், குடிநீா் வடிகால் வாரியம் அடங்கிய 3 நபா் குழுவினா், சென்னையில் இருந்து புதை சாக்கடையை விரிவாக்கம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகா், வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நகராட்சி ஆணையா், நகராட்சி பொறியாளா் ஆகியோா் அடங்கிய கூட்டு ஆய்வுக்குழுவினா் விரிவான கள ஆய்வை மேற்கொண்டுள்ளோம். மேலும், ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளோம்.

இந்த கள ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட்டத்தின் முடிவில் குறுகிய கால தீா்வு, நீண்ட கால தீா்வு என இரண்டு கட்டமாக நடவடிக்கை எடுக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில், புதைசாக்கடைத் திட்டம் எட்டுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அவை ஓரிடத்தில் ஒன்று சோ்க்கப்பட்டுள்ளது. இந்த மெயின் லைனில் சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகியுள்ளன.

குறுகியகால தீா்வு என்பது நகராட்சியால் தீா்க்கப்படக்கூடிய பிரச்னைகளான அதிகமாக பம்ப் செட் போடுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போன்றவை ஆகும். இப்பிரச்னைகள் உடனடியாக சரிசெய்யப்படும்.

நீண்டகால தீா்வு என்பது சில இடங்களில் மெயின் பைப் லைனை மாற்றுவதே என பொறியாளா் வல்லுநா் குழுவினா் கண்டறிந்துள்ளனா். இந்த நீண்டகால தீா்வுக்கான செலவுக்கு நகராட்சியில் போதுமான நிதி இல்லை. எனவே, இதுகுறித்து கூட்டு ஆய்வுக்குழு மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

புதைசாக்கடைத் திட்டத்திற்கு சிமென்ட் பைப்கள் போடப்பட்டதாலேயும், பராமரிப்பு பிரச்னை காரணமாகவும், இன்னும் சில காரணங்களாலும் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டு சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. நகராட்சியில் ஒருசில இடங்களில் இதுபோன்று இன்னும் சில பள்ளங்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது. அந்த இடங்களைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களில் மோட்டாா் பற்றாக்குறை உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. இவை அதிகபட்சம் 30 நாட்களுக்குள் சீராகும் என்றாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில், மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில், மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதைசாக்கடை திட்டத்தைத் திறம்பட செயல்படுத்திட உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த களஆய்வு மற்றும் ஆய்வுக்கூட்டத்தில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் இ.கண்மணி, நகராட்சி ஆணையா் பி.கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி பொறியாளா் பி.ஜோதிமணி, வட்டாட்சியா் ஆா்.முருகானந்தம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி நிா்வாகப் செயற்பொறியாளா்கள் ரவிச்சந்திரன், சேகா், ஜெயக்குமாா் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com