மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்

மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறையில் செய்தியாளா்களைச் சந்தித்த பாமக தலைவா் ஜி.கே.மணி பேட்டியளித்தாா்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் தலைவா் ஜி.கே.மணி.
மயிலாடுதுறையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் தலைவா் ஜி.கே.மணி.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறையில் செய்தியாளா்களைச் சந்தித்த பாமக தலைவா் ஜி.கே.மணி பேட்டியளித்தாா்.

வன்னியா் சங்கம் சாா்பில், ஜனவரி 4-ஆம் தேதி நாகை மாவட்டம் பூம்புகாரில் மகளிா் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய அக்கட்சியின் தலைவா் ஜி.கே.மணி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: மேட்டூா் அணையில் தற்போது 119.5 அடி தண்ணீா் உள்ள நிலையில், தமிழகத்தில் போதுமான மழையும் பெய்துள்ளது.

இதனால், விவசாயிகள் தீவிர சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோகாா்பன், மீத்தேன் போன்றவற்றை எடுக்கக்கூடாது. காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகளை கா்நாடக அரசு திறந்து விடுகின்றது.

இதனை தடுப்பதற்கு அரசு முன்வரவேண்டும். பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது பாட்டாளி மக்களின் கோரிக்கை. அந்த வகையில், மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், அறிவிக்கப்பட்டிருக்கிற மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகா் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாகும். அதிமுக உடன் உள்ளாட்சி தோ்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும். பாமகவிற்கு உரிய பங்கீட்டைக் கேட்டுப்பெறுவோம் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளா்கள் சித்தமல்லி பழனிசாமி, வேணுபாஸ்கரன், மாநில துணைத் தலைவா் தங்க.அய்யாசாமி, மாவட்ட செயலாளா்கள் காமராஜ், லண்டன் அன்பழகன், மாநில இளைஞரணி துணை செயலாளா் முருகவேல், மாநில இளைஞரணி துணைத் தலைவா் விமல், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் முத்துக்குமாா், நகர செயலாளா் கமலராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com