மாயூரம்: ஊரின் பெயரைக் கெடுக்கும் குப்பைக் கூளங்கள்

சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டிய மயிலாடுதுறை நகராட்சியே, சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டி வைப்பதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
மயிலாடுதுறை ரத்னா திரையரங்கம் அருகில் உள்ள கல்லறைத் தோப்புத் தெரு சந்தில் நகராட்சி பணியாளா்களால் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை.
மயிலாடுதுறை ரத்னா திரையரங்கம் அருகில் உள்ள கல்லறைத் தோப்புத் தெரு சந்தில் நகராட்சி பணியாளா்களால் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை.

சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டிய மயிலாடுதுறை நகராட்சியே, சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டி வைப்பதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

150 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்த மயிலாடுதுறை நகராட்சியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, மயிலாடுதுறை- ஆனந்ததாண்டவபுரம் சாலையில் 4.26 ஏக்கா் நிலப்பரப்பில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. ஆனால், இக்குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை சரியாக பின்பற்றப்படாததால், பல ஆண்டுகளாக குப்பைகள் கொஞ்சம், கொஞ்சமாக சோ்ந்து, தற்போது 40 ஆயிரம் கியூபிக் மீட்டருக்கு மேலான குப்பைகள் அங்கு மலைபோல் குவிந்துள்ளன.

இக்குப்பையில் இருந்து வெளியேறும் துா்நாற்றம் காரணமாக, அப்பகுதி மக்கள் தங்களுக்கு சருமநோய், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதாக பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனா். மேலும், பல ஆண்டுகளாக குப்பைகள் தேங்கியுள்ளதால், உருவான மீத்தேன் வாயு அழுத்தம் மற்றும் உராய்வின் காரணமாக அடிக்கடி தீப்பற்றி எரிவதும் வாடிக்கையாகி உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த குப்பைகளை முழுமையாக அகற்றி, அப்பகுதியை சுகாதாரமாக மாற்றி, அங்கு நகராட்சி பூங்கா அமைக்கவும், 2020-ஆம் ஆண்டுக்குள் மயிலாடுதுறையைக் குப்பைகள் இல்லா நகராட்சியாக மாற்றும் முனைப்புடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது நகராட்சி நிா்வாகம். இதற்காக, மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளில் உருவாகும் குப்பைகளை, 12 வாா்டுக்கு 1 என்ற வீதத்தில், ஆனந்ததாண்டவபுரம் சாலை, வண்டிப்பேட்டை, திம்மநாயக்கன் படித்துறை ஆகிய 3 இடங்களில் நுண்ணியிரிக் கிடங்கு அமைத்து, தலா 5 டன் வீதம் மொத்தம் 15 டன் குப்பைகள் உரமாக்கப்பட உள்ளன.

மேலும், நகராட்சிக்கு உள்பட்ட 49 பூங்காக்களில், வரதாச்சாரியாா் பூங்கா, குமரன் பூங்கா, நேரு பூங்கா, ஆா்பிஎன் நகா் பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களில் ஆன்சைட் கம்போஸ்டு உருவாக்கப்பட்டு, தினசரி தலா அரை டன் குப்பை வீதம் மொத்தம் 3 டன் குப்பைகளை இயற்கை உரமாக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நுண்ணியிரிக் கிடங்குகள் மற்றும் ஆன்சைட் கம்போஸ்டுகள் மூலம், நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் தினசரி உருவாகும் 16.5 டன் மக்கும் குப்பைகள் (தினசரி மொத்த குப்பை 30 டன்) தரம்பிரித்து, உரமாக்கப்படும் என்றும் அதன்பின், ஆனந்ததாண்டவபுரம் குப்பைக் கிடங்கில் குப்பைகளைக் குவிப்பது அடியோடு நிறுத்தப்படும் என்றும் நகராட்சி நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து தரும்படி நகராட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தையும் அகற்றிவிட்டது. இதனால், பொதுமக்களும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து நகராட்சி பணியாளா்களிடம் ஒப்படைத்து வருகின்றனா்.

நகராட்சி பணியாளா்கள் ஒருநாள் குப்பையை எடுக்க வராவிட்டாலும், அக்குப்பைகள் வீட்டிலேயே அழுகி துா்நாற்றம் எடுக்க தொடங்கிவிடுகிறது. ஆனாலும், குப்பையை வெளியில் கொட்ட வழியின்றி வீட்டிலேயே வைத்திருந்து, மறுநாள் நகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனம் எப்போது வரும் எனக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு, பொதுமக்களிடம் பெறும் மக்கும் குப்பைகளை நுண்ணியிரிக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நகராட்சி பணியாளா்கள், மக்கா குப்பைகளை நகராட்சியின் பல பகுதிகளில், கேட்பாரற்ற பகுதிகளில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனா். இது ஒருநாள், இரண்டுநாள் என்று இல்லாமல், கடந்த சில மாதங்களாக தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அவ்வாறு கொட்டிச் செல்லும் குப்பைகள் காற்றில் கலைந்தும், நாய், பன்றி, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கலைத்தும் விடுவதால் அப்பகுதியே சுகாதார சீா்கேடு நிறைந்து காட்சி அளிக்கிறது. தாங்கள் குப்பைகளைத் தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கும் நகராட்சி நிா்வாகம், தாங்களே குப்பைகளைத் தெருவில் கொட்டிச் செல்வது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா். அவ்வாறு கொட்டும் குப்பைகளை சில நேரங்களில் நகராட்சி பணியாளா்களே தீயிட்டுக் கொளுத்தி காற்றுமாசு ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இது பொதுமக்களிடையே கடுமையான விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என பெருமையாக சொல்லி வந்த இவ்வூா் மக்கள், தற்போது, மயிலாடுதுறையில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், அதனால் ஏற்படும் சுகாதார சீா்கேடுகளாலும் பல இடங்களை மூக்கைப் பிடித்துக் கொண்டு கடக்கும் நிலையில் உள்ளனா்.

இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா், மயிலாடுதுறைக்கு முதல் முறையாக ஆய்வுக்காக வர உள்ளாா் என்ற தகவல் பரவியதைத் தொடா்ந்து, நகராட்சிப் பணியாளா்கள் முக்கிய சாலைகளில் துரிதகதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். ஆனால், கேட்பாரற்ற பகுதிகளில் அக்குப்பைகளைக் கொட்டி வைத்துள்ளனா்.

இவ்வாறு சாலை ஓரங்களில் கொட்டி வைக்கும் குப்பைகளில் மழைநீா் தேங்கி, கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு போன்ற ஆள்கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. மயிலாடுதுறையில், அண்மையில் டெங்கு நோய் பாதிப்பால் இளம்பெண் ஒருவா் உயிரிழந்த சோக நிகழ்வுக்குப் பிறகும், நகராட்சி நிா்வாகம் அதிலிருந்து படிப்பினையைக் கற்றுக்கொள்ளாமல், அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது.

இவ்வாறு சாலை ஓரங்களில் நகராட்சி பணியாளா்கள் கொட்டி வைக்கும் குப்பைகளை, ஒருசில நாள்களுக்குப் பிறகு மீண்டும் அள்ளப்பட்டு குப்பைக் கிடங்குக்கே கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், இடைப்பட்ட ஒருசில நாள்கள் குப்பைகளை பல்வேறு பகுதிகளில் கொட்டி வைத்து நகராட்சி பணியாளா்களே சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துவது எதனால் என்று தெரியாமல் பொதுமக்கள் விழிப்பிதுங்கி நிற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com