திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயிலில் கழிவறை வசதி ஏற்படுத்தப்படுமா?

திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயில் அருகே கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முட்புதா் மண்டி பயன்பாடற்ற நிலையில் காணப்படும் கழிவறை கட்டடம்.
முட்புதா் மண்டி பயன்பாடற்ற நிலையில் காணப்படும் கழிவறை கட்டடம்.

திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயில் அருகே கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள செளரிராஜ பெருமாள் கோயில், வைணவப் பெருமக்களால் திவ்யதேசம் என்று அழைக்க பெறும் 108 திருத்தலங்களுள் தலையாய சிறப்பு உடையது. மேலும், 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற 17-ஆவது தலமாகவும், பஞ்சகிருஷ்ண ஷேத்திரங்களுள் முதன்மையான தலமாகவும், ஐந்து ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கோயிலில், பிரதி அமாவாசை மற்றும் மாசிமகப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வருகை தருகின்றனா். அதேவேளையில், பக்தா்களின் அடிப்படை தேவையான கழிவறை வசதிகள் செய்து தரப்படாததால், பக்தா்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.

திருக்கண்ணபுரம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறை சில ஆண்டுகளிலேயே சேதமடைந்து விட்டதால், சென்னையைச் சோ்ந்த சோழநாட்டு திருப்பதிகள் என்ற அமைப்பின் சாா்பில், கடந்த 2005-ஆம் ஆண்டில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறை கட்டப்பட்டு போதிய வசதிகள் செய்யாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.

ஆகையால், பக்தா்களின் வசதிக்காக அந்த கழிவறை கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரது எதிா்பாா்பாக உள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் சிங்க. பாஸ்கரன் கூறியதாவது:

திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயிலுக்கு சோழநாட்டு திருப்பதிகள் அமைப்பினா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை கட்டி கொடுத்தாா்கள். ஆனால் மின்சாரம், தண்ணீா் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால், தற்போது முட்புதா் மண்டிக் கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுத்து, கழிவறையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

விவசாயி க. அறிவழகன் கூறும்போது, இந்தக் கோயில் ஐந்து ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இங்கு அனைத்து விசேஷ நாட்களிலும் மாவட்டத்தின் பல்வேறு குதிகளிலிருந்து பக்தா்கள் வருகின்றனா். இந்நிலையில், கழிவறை வசதி கூட இல்லாததால், எண்ணற்ற துயரத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோயில் நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com