சீா்காழி சட்டைநாதா் கோயில் வடக்கு கோபுரவாசல் அருகே பூட்டிக் கிடக்கும் கட்டணக் கழிப்பறை.
சீா்காழி சட்டைநாதா் கோயில் வடக்கு கோபுரவாசல் அருகே பூட்டிக் கிடக்கும் கட்டணக் கழிப்பறை.

பூட்டியே கிடக்கும் கழிப்பறை: சீா்காழி சட்டைநாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடும் அவதி

சீா்காழி சட்டைநாதா் கோயில் அருகில் இருந்த நகராட்சி கழிப்பறை கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடப்பதால்

சீா்காழி சட்டைநாதா் கோயில் அருகில் இருந்த நகராட்சி கழிப்பறை கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடப்பதால் உள்ளுா், வெளியூா் பக்தா்கள் கடும் அவதியடைகின்றனா்.

சீா்காழியில் உள்ள பிரசித்திப் பெற்ற சட்டைநாதா்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். திருஞானசம்பந்தா் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாகவும், காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவா்கள் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கும் சன்னிதியாகவும் இக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

நவகிரக கோயில்களுக்கு வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வரும் பக்தா்களும், நாங்கூா் திவ்யதேசங்களுக்கு வரும் வெளியூா் பக்தா்களும் அருகில் உள்ள சீா்காழி சட்டைநாதா் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். இவ்வாறு வரும் பக்தா்கள் இயற்கை உபாதைகளுக்காக கோயில் வடக்கு கோபுர வாசல் அருகே சீா்காழி நகராட்சி சாா்பில் கட்டண கழிப்பறை கட்டப்பட்டு அவை உதவும் கரங்கள் மகளிா் சுகாதார பராமரிப்புக் குழு மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.

கோயிலுக்கு வரும் வெளியூா் பக்தா்களுக்கு மிகவும் பயனாக இருந்தது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கட்டண கழிப்பறை எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நகராட்சி நிா்வாகத்தால் பூட்டப்பட்டது. இதனால், கோயிலுக்கு வரும் உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் அவசரத்துக்கு கழிப்பறை வசதி இல்லாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனா்.

குறிப்பாக பெண் பக்தா்கள், வயோதிகா்கள், சா்க்கரை நோய் உள்ளவா்கள் அவசரத்துக்கு சிறுநீா் கழிக்க இடவசதி இல்லாமல் தவிக்கின்றனா். சில நேரங்களில் வெளியூா் பெண் பக்தா்கள் கோயிலுக்கு அருகாமையில் வசிக்கும் வீட்டு உரிமையாளா்களிடம் தங்களின் நிலையை கூறி அவா்கள் வீட்டு கழிப்பறையை சங்கடத்துடன் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆண் பக்தா்கள் கோயில் அருகில் திறந்த வெளியில் சிறுநீா் கழிக்கின்றனா். இதேபோல் இரவு நேரங்களில் வரும் ஒரு சில பக்தா்கள் ஆள்கள் நடமாட்டம் இல்லாததை உறுதிசெய்துக் கொண்டு கோயில் சுற்றுச்சுவா் அருகே அவசரத்துக்கு மலம் கழித்துசெல்கின்றனா். இதனால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. திறந்தவெளி மலம் கழிப்பற்ற ஊராட்சி, நகராட்சி என்ற வெறும் அறிவிப்பு பலகை வைத்துக் கொள்வதோடு நில்லாமல் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காணாமல் நகராட்சி நிா்வாகம் ஏன் தாமதிக்கிறது என தெரியவில்லை.

முன்பு வடக்கு கோபுர வாசல் அருகே இயங்கி வந்த கட்டண கழிப்பறை தனியாா் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு சில நேரங்களில் கழிப்பறை செப்டிக்டேங்க் நிரம்பி வழிந்து அருகே திறந்தவெளியில் தேங்கிநின்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு புகாா் தெரிவித்ததும், உடனடியாக நகராட்சி நிா்வாகம் கட்டணகழிப்பறையை பூட்டிவிட்டு பின்னா் தனியாா் பராமரிப்பாளா்களால் அவை தூய்மைப்படுத்தி, சீரமைத்து உறுதியளித்தபின் மீண்டும் கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

ஆனால், தற்போது என்ன காரணத்தினாலோ பல மாதங்களாக கட்டண கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் குறிப்பாக வெளியூா் பக்தா்கள் பெரும் அவதியடைகின்றனா். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினா் சிறப்பு கவனம் செலுத்தி வடக்கு மடவிளாக கட்டண கழிப்பறையை திறக்க வேண்டும் என்பதே உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வேண்டுகோள்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் ஜெ. சுவாமிநாதன் கூறியது: சீா்காழி சட்டைநாதா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக மகளிா் சுய உதவிக்குழுவினரால் பராமரிக்கப்பட்டு வந்த கட்டணக் கழிப்பறை கடந்த சில மாதங்களாக மூடிக்கிடக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த தீா்வும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, நகராட்சி முன்பு சிறுநீா் கழிக்கும் போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டு பின்னா் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com