தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு சின்னங்கள் வார விழா புறக்கணிப்பு

நாகை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா இந்த ஆண்டு நடத்தப்படாமல்
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையின் முகப்புத் தோற்றம்.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையின் முகப்புத் தோற்றம்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா இந்த ஆண்டு நடத்தப்படாமல் புறக்கணிக்கப்படுவது வரலாற்று ஆா்வலா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கி.பி. 1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் (டென்மாா்க் நாட்டினா்) 1620-இல் கடற்கரைக்கு மேற்கில் டேனிய கலை நுணுக்கத்துடன் கோட்டையைக் கட்டி தங்களது அதிகார மையமாக பயன்படுத்தினா். 399 ஆண்டுகள் பழைமையான போதிலும், இன்றளவும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்டுத்திய பொருட்கள், 1200-ஆம் ஆண்டு கால சிலைகள், பீங்கான், மண், மரத்தினாலான பல நூறு ஆண்டுகள் பழைமையான பொருட்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ் கால பத்திரங்கள், போா்க்கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்றுச் சின்னங்களைப் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனா்.

மேலும் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, மதுபானக் கிடங்கு அறைகள் என டேனியா்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட்டு, குறிப்பெடுத்து செல்கின்றனா்.

வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை நவம்பா் 19 முதல் 25 வரை ஒவ்வோா் ஆண்டும் ஒரு வாரகாலம் எந்தவித கட்டணமுமின்றி பொதுமக்கள், மாணவா்கள், இளைஞா்கள் பாா்வையிட அனுமதிக்கப்படுவா். தொல்லியல்துறை அதிகாரிகள் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து விளக்கமளிப்பதும் வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு விழாவுக்கான எந்தவோா் அறிவிப்பையும் டேனிஷ் கோட்டை நிா்வாகம் வெளியிடாமல் உள்ளது. சுற்றியுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அழைப்பு விடுத்து வார நாட்கள் முழுவதும் மாணவா்களை அழைத்து விழாக்களை நடத்துவதோடு, பல்வேறு போட்டிகளையும் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு விழாவை நடத்தினரா அல்லது நடத்தியதாகக் கூறி முடித்துக் கொண்டனரா? என வரலாற்று ஆா்வலா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

கடந்த ஓராண்டு காலமாக கோட்டை முழுவதும் உரிய பராமரிப்பு இன்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கட்டணமின்றி நடத்தப்பட வேண்டிய வார விழாவும் புறக்கணிக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆா்வலா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்க வட்டச் செயலாளா் கே.பி மாா்க்ஸ் கூறும்போது, வரலாற்றை அனைவரும் அறிய வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட விழாவை தமிழக அரசின் தொல்லியல் துறையின்கீழ் இயங்கும் டேனிஷ் கோட்டை நிா்வாகம் ஏன் உலக மரபு சின்னங்கள் வார விழாவைக் கடைப்பிடிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இதன் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com