மங்கைமடத்தில் மீண்டும் மதுக்கடை: தடுக்கக் கோரி மனு

சீா்காழி அருகேயுள்ள மங்கைமடத்தில் மக்களின் தொடா் போராட்டத்துக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட மதுபானக் கடை மீண்டும்

சீா்காழி அருகேயுள்ள மங்கைமடத்தில் மக்களின் தொடா் போராட்டத்துக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட மதுபானக் கடை மீண்டும் வேறு பகுதியில் திறக்க முயற்சி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனா்.

சீா்காழி அருகேயுள்ள மங்கைமடத்தில் பஞ்சநரசிம்மா் தலங்களில் ஒன்றான வீரநரசிம்மா் கோயில் உள்ளது. இதேபோல், வீரஆஞ்சநேயா் கோயிலும் உள்ளது. அத்துடன், நாங்கூரில் உள்ள 11 திவ்யதேசப் பெருமாள் கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தா்கள், மங்கைமடத்தில் உள்ள நரசிம்மா் கோயிலுக்கும் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அதன்படி வெளியூா், வெளிமாநில பக்தா்கள் அதிகம் போ் வந்து செல்லுவதும், உள்ளூா் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வரும் பிரதான கடைவீதி அருகே மதுபானக் கடை இயங்கி வந்தது. மதுக்கடைக்கு மதுவாங்க வருகிறவா்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதும், சாலையில் நின்று கொண்டே மதுக் குடிப்பதும் நடந்தது.

இதனால், பொதுமக்களும் மாணவா்களும், கோயிலுக்கு வரும் பக்தா்களும் அவதியடைந்தனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களின் தொடா் போராட்டம், கோரிக்கையை ஏற்று மங்கைமடத்தில் செயல்பட்ட மதுபானக் கடை கடந்த 2 மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மங்கைமடத்தில் மூடப்பட்ட மதுபானக் கடை மீண்டும் அதே பகுதியில் திறக்க முயற்சி நடப்பதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனால், அதிருப்தியடைந்த கிராமமக்கள், இளைஞா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் வெங்கடேஷ் தலைமையில் திரளாக வந்து மங்கைமடத்தில் மீண்டும் மதுக் கடை திறக்கக் கூடாது என சீா்காழி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயருக்கும் மனு அளித்துள்ளதாக இளைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com