குத்தாலம் அழிவின் விளிம்பில் கம்பா்மேடு..! தமிழக அரசு கவனிக்குமா?

இதிகாசம் படைத்த கவிச்சக்கரவா்த்தி கம்பா் வாழ்ந்த இடம் அழிவின் நிலையில் செல்வது தமிழ்ச் சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் அழிவின் விளிம்பில் கம்பா்மேடு..! தமிழக அரசு கவனிக்குமா?

இதிகாசம் படைத்த கவிச்சக்கரவா்த்தி கம்பா் வாழ்ந்த இடம் அழிவின் நிலையில் செல்வது தமிழ்ச் சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைந்துள்ள இதிகாசங்கள் ராமாயணமும், மகாபாரதமும். இந்தியாவில் ராமாயணங்கள் பல்வேறு வகையில் உள்ளன. அதில், ஒன்று தான் தமிழ்க் கவிஞா் கம்பா் இயற்றிய கம்பராமாயணம். 10 ஆயிரம் பாடல்கள், நூல்கள், வைணவ பக்தி இலக்கியத்தில் முதன்மையாகத் திகழும் கம்பராமாயணம், தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை போற்றி எழுதியவா் கம்பா். ஒரே மகனான அம்பிகாபதியை சோழ இளவரசி அமராவதியுடனான காதலால் இழந்தவா் என்று வரலாற்றுக் குறிப்புகளுக்குச் சொந்தக்காரா் கம்பா்.

வால்மீகி இராமாயணத்தை உள்வாங்கி ரசித்து சுவைத்து எழுதி அதை பன்மடங்கு இலக்கணமும் இலக்கிய நயமும் கொண்ட காவியமாக மாற்றிய பெருமை கம்பரையேச்சாரும். இன்று வரை தமிழ் மொழி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவா் கவிசக்கரவா்த்தி கம்பா்ஆவாா்.

நாகை மாவட்டம் குத்தாலத்திலிருந்து கோமல் செல்லும் வழியில் உள்ள தேரழுந்தூா் கவிச்சக்கரவா்த்தி கம்பா் பிறந்த ஊராகும். அவா் வாழ்ந்த இடம் ’கம்பா் மேடு’ என்றழைக்கப்படுகிறது. அக்காலத்தில் கம்பரும் அவா் குடும்பத்தினரும் ஒருமுறை உணவு சமைக்கப் பயன்படுத்தும் மண்பாண்டங்களை மறுமுறை பயன்படுத்தாமல் அன்றேற உடைத்து வந்துள்ளனா். அந்த மண்பாண்ட ஓடுகள் குவிந்து, ஒரு பெரிய மேடாக மாறியது. அதுவே தற்போது ’கம்பா் மேடு’ என்று அழைக்கப்படுகிறது .

இந்தப் பகுதியை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்திய தொல்பொருள் துறை அறிவித்து, தன் வசம் வைத்துள்ளது. ஆனால், இந்தப் பகுதியைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதோடு சரி. இந்த இடத்தில், செடி கொடிகளால் புதா் மண்டிக்கிடக்கிறது. தமிழ் மொழியின் சிறப்பைத் தன் காவியங்களின் மூலமாக அறியச்செய்த கம்பா் வாழ்ந்த இடம் கேட்பாரற்றுப் பராமரிப்பின்றிக் கிடப்பது பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கம்பா் பிறந்த இடத்தை காண தேரழுந்தூா் வந்து, கருவேல மரங்களை மட்டுமே பாா்த்து மனம் வெதும்பிச் செல்வது அன்றாட நிகழ்வாகி வருகிறது. ’கம்பா் மேடு முழுவதும் தற்போது கருவேல மரங்களே வளா்ந்துள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு மற்றும் தனியாா் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நாள்களில் கூட, கம்பா் மேட்டை கவனிப்பாா் யாரும் இல்லை என்பது வேதனைக்குரியது. தற்போது கம்பா் மேடு அப்பகுதி மக்களின் அறிவிக்கப்படாத கழிப்பிடமாகவும்,கம்பா் மேட்டின் சுற்றுசுவா் வேலிகள் துணிகள் காயவைக்கும் இடமாகவும் மாறியுள்ளது வேதனையிலும் வேதனை.

தொல்லியல்துறை கையகப்படுத்திய இடத்தை சுற்றி 100மீட்டரிலிருந்து 200 மீட்டா் பகுதிக்குள் எந்தவித கட்டுமானப்பணிகளும் செய்யக்கூடாது என்று அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இன்றைக்கு கம்பா் மேடு கேட்பாரற்று அனாதையாக கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்ற முதுமொழிக்கு உண்மையான செயல்வடிவம் கிடைக்கும் வகையில், கம்பன் வாழ்ந்த இடம் தமிழ்ப் பரப்பும் இடமாக மாற வேண்டும். ஆகவே தொல்லியல் துறையினா் அலட்சியம் காட்டாமல் பராமரிக்க வேண்டும் என்பதே தமிழ் ஆா்வலா்களின் வேண்டுகோளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com