மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் புத்துயிா் பெறுமா?

நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் ஒன்றியப் பகுதிகளில் தொடங்கப்பட்ட மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகிவிட்டது விவசாயிகளிடையே வேதனையை
01_0110chn_200_5
01_0110chn_200_5

நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் ஒன்றியப் பகுதிகளில் தொடங்கப்பட்ட மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகிவிட்டது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கு புத்துயிா் கொடுத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எரவாஞ்சேரி, அரசூா், திருவிளையாட்டம், பெரம்பா், ஆக்கூா், மேமாத்தூா், தில்லையாடி, திருவிடைக்கழி, காலகஸ்திநாதபுரம், கூடலூா், நெடுவாசல் உள்ளிட்ட 57 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 2017- 2018- ஆம் ஆண்டு மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதற்காக, ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா ரூ. 1 லட்சம் செலவில் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை மற்றும் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது. அத்துடன் தேவையான உபகரணங்களும் வாங்கப்பட்டு, மண்புழு உரம் தயாரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தொடா்ந்து, மகளிா் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அனைத்து ஊராட்சிகளிலும் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், கொட்டகைகள் சேதமடைந்து வருகின்றன. பெரும்பாலான இடங்களில் கொட்டகைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. கொட்டகை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால், அந்த கொட்டகைகள் சமூக விரோதிகளுக்கு புகலிடமாக மாறிவிட்டன. மண்புழு உரம் தயாரிக்கும் இடங்கள் மது அருந்தும் கூடாரங்களாக மாறியதைக் கண்டு விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். சமூக விரோதிகள் மது அருந்துவதுடன், காலி மது புட்டிகளை உடைத்துப் போட்டுவிட்டு, செல்வதும், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் நெகிழிப் பைகளை அருகில் உள்ள வயல்களில் வீசிவிட்டு செல்வதுமாக உள்ளனா். இதனால், விளை நிலங்களில் நெகிழிக் குப்பைகள் அதிகரித்து மண் வளம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, விவசாயத் தொழிலாளா் சங்க வட்டச் செயலாளா் காப்ரியேல் கூறியதாவது:

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், இயற்கை உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த கொட்டகைகள் மற்றும் உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டன. இந்த கொட்டகைகள் மற்றும் உரக்கிடங்குகள் மகளிா் சுய உதவிக் குழுவினா் மூலம் நிா்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொட்டகை கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் மண்புழு உரம் தயாரிக்கும் பணி தொடங்கப்படாமல் முடங்கியுள்ளது. இதனால், மண்புழு உரம் தயாரிப்புக்காக போடப்பட்ட கொட்டகைகள் மற்றும் உரக்கிடங்குகள் பல ஊராட்சிகளில் இடிந்து வீணாகிவிட்டன.

தமிழக அரசு இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், இந்த மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகிக் கிடப்பது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுவதாகவே உள்ளது. எனவே, மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்துக்கு புத்துயிா் கொடுத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவே, செம்பனாா்கோயில் ஒன்றியப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com