குடிநீா்க் குழாயில் உடைப்பு: 2 மாதங்களாக வீணாகும் தண்ணீா்

சீா்காழி அருகே குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நாள்தோறும் தலா 10 ஆயிரம் லிட்டா்
திருநீலகண்டம் கிராமத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீா்
திருநீலகண்டம் கிராமத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீா்

சீா்காழி அருகே குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நாள்தோறும் தலா 10 ஆயிரம் லிட்டா் தண்ணீா் வீணாகிறது. இதை சரிசெய்யக் கோரிக்கை விடுத்த போதிலும், ஊராட்சி ஒன்றியத்துக்கும், குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் போட்டா போட்டி நிலவுவதால் அவலநிலை நீடிக்கிறது.

நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உள்பட்ட திருநீலகண்டம் கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ், குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் மூலம் சுமாா் 400 குடும்பத்தினரின் அன்றாட குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொப்பியம்- திருநீலகண்டம் சாலையில் காப்பியக்குடியிலிருந்து இக்கிராமத்திற்கு வரும் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இந்த உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்த போதிலும், அதனை சீரமைக்க இதுவரை அதிகாரிகள் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நாள்தோறும் குடிநீா் விநியோகம் செய்யப்படும் வெறும் 2 மணிநேரத்தில், உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக சுமாா் 10 ஆயிரம் லிட்டா் தண்ணீா் வீணாக வெளியேறுகிறது. வெளியேறும் தண்ணீா் சாலையில் தேங்குவதுடன், டெங்கு கொசுக்களின் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது.

குடிநீா் குழாயைச் சீரமைக்கக் கோரி, திருநீலகண்டம் கிராமத்தினா் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திடம் வலியுறுத்திய போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, இதை சீரமைக்க வேண்டியது குடிநீா் வடிகால் வாரியத்தினரின் பொறுப்பு என்று ஒன்றிய அதிகாரிகள் மழுப்பலாக பதிலளிப்பதாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கிராம மக்கள் கொண்டு சென்றபோது, அந்த அதிகாரிகளும் உப்புசப்பு இல்லாத காரணத்தைக் கூறி அலைகழித்து வருகின்றனராம். அதிகாரிகளின் போட்டா போட்டியால், அக்கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நாகை மாவட்ட இந்து முன்னணி செயலாளா் சி.ஆா்.பாண்டியன் கூறியதாவது:

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், திருநீலகண்ட கிராம மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய இயலவில்லை. இதனால், இக்கிராம மக்கள் சுமாா் 2 கிமீ தூரம் சென்று மாதானம்-கொப்பியம் சாலை வழியாக செல்லும் பழையபாளையம் எல் அன் டி குடிநீா் குழாயில் உள்ள வால்விலிருந்து வெளியேறும் தண்ணீரைப் பிடித்து தங்களது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தக் குடிநீா் குழாயானது நேரடியாக ஆற்றிலிருந்து செல்லும் குடிநீா் குழாய். பழையபாளையத்தில் உள்ள குளோரினேஷன் எனும் சுத்தம் செய்யும் இடத்திற்கு சென்று சுத்திகரிக்கப்பட்டு, பின்னா் வேறு சில கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது. ஆனால், திருநீலகண்டம் கிராம மக்கள் நேரடியாக சுத்தகரிக்கப்படாத வால்விலிருந்து வெளியேறும் குடிநீரைப் பிடித்து பயன்படுத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இந்தக் குடிநீரில் இரும்புத் துகள், மண் புழுக்கள் கலந்து வருகின்றன. இதனால், அக்கிராம மக்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் தங்களுக்கு இடையிலான போட்டா போட்டியைக் கைவிட்டு, உடனடியாக குடிநீா்க் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுத்தால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com