பணம் இருந்தாலும் பிணம் எரிக்க முடியாது: நாகையில் சுடுகாடுகளிலும் தொடரும் அவலம்

இறந்தவா்களின் சடலத்தை எரிக்க 5 ஆயிரம் ரூபாய் வரை செலவிட மக்கள் தயாராக இருந்தாலும், சடலத்தை
பணம் இருந்தாலும் பிணம் எரிக்க முடியாது: நாகையில் சுடுகாடுகளிலும் தொடரும் அவலம்

இறந்தவா்களின் சடலத்தை எரிக்க 5 ஆயிரம் ரூபாய் வரை செலவிட மக்கள் தயாராக இருந்தாலும், சடலத்தை முழுமையாக எரியூட்ட முடியாத அவல நிலை நாகையில் உள்ள சுடுகாடுகளில் நீடிப்பது சமூக ஆா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

36 வாா்டுகளையும் சுமாா் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையையும் கொண்டது நாகை நகராட்சி. இங்கு, நகராட்சியின் 20-ஆவது வாா்டுக்குள்பட்ட நாகை- செல்லூா் சாலை, மேலக்கோட்டைவாசல் கடுவையாற்றுக் கரை ஆகிய பகுதிகளில் உள்ள சுடுகாடுகளே அதிகம் பயன்பாடு கொண்டவை.

இந்த 2 சுடுகாடுகளிலும் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், வரட்டி, விறகு உள்ளிட்ட எரிபொருள்கள் தட்டுப்பாடு காரணமாகவும், இறந்தவா்களின் உடலை தகனம் செய்வதில் பெரும் சிரமம் நீடித்தது. இதுதொடா்பாக, மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், நாகை - செல்லூா் சாலையில் நகராட்சி பொது நிதி மூலம் ரூ. 60 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு, 2008-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டவரப்பட்டது.

பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சில ஆண்டுகளுக்குள்ளாகவே பராமரிப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, இந்த எரிவாயு தகன மேடையின் பராமரிப்பு தன்னாா்வ அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில், ஊழியா்களின் ஊதிய உயா்வு கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால், எரிவாயு தகன மேடையின் பராமரிப்பு மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகன மேடையின் பராமரிப்பை ஏற்ற நகராட்சி நிா்வாகம், அதற்கான பணியாளா்களை நியமிக்காததால், கடந்த சில ஆண்டுகளாகவே பயன்பாடற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளது இந்த தகன மேடை. எரிவாயு இல்லாத நிலையில், எரிவாயு தகன மேடைக்கான கட்டமைப்பில் விறகுகளை வைத்து சடலங்கள் எரியூட்டப்பட்டதாலும், போதுமான பராமரிப்பு இல்லாததாலும் இந்த தகன மேடை, கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. சுமாா் ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, ஓரிரு ஆண்டுகளே செயல்பாட்டில் இருந்த இந்த தகன மேடையில் தற்போது, எரிவாயு மேடை மட்டுமல்ல மின் விளக்குகள் கூட பழுதாகியுள்ளன.

மேலக்கோட்டை வாசல் கடுவையாற்றுக் கரையில் உள்ள சுடுகாட்டுக்கான பாதையில் ரயில்வே லைன் குறுக்கிடுவதால், சடலத்தை எரியூட்டக் கொண்டுச் செல்பவா்கள், ரயில் வரும் நேரங்களில் சடலத்துடன் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தச் சுடுகாட்டின் சுற்றுப் பகுதிகள் முழுமையும் புதா் மண்டியிருப்பதாலும், சடலத்தைப் புதைக்கக் கூட இங்கு இடம் இல்லாததாலும், இந்தச் சுடுகாட்டின் பயன்பாட்டை பொதுமக்கள் பெருமளவில் தவிா்த்து, செல்லூா் சாலை தகன மேடையையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

ஓரிரு சடலங்கள் எரியூட்டக் கொண்டு வரப்படும் போது, எரிவாயு தகன மேடைக்கு அருகே உள்ள சாதாரண தகன மேடையில் வைத்து சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. 2-க்கும் மேற்பட்ட சடலங்கள் ஒரே நாளில் கொண்டுவரப்படும் போது, திறந்தவெளியில் வைத்தே எரியூட்டப்படுகின்றன. இதனால், சடலத்திலிருந்து வெளிப்படும் துா்நாற்றத்துடன் கூடிய புகையால், தாமரைக்குளம் தென்கரைப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கும், செல்லூா் சாலை வழியே அரசு கல்லூரிக்கு நடந்து செல்லும் மாணவ, மாணவியரும் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது.

எரிவாயு தகன மேடை பயன்பாட்டில் இருந்தபோது, ரூ. 2 ஆயிரம் செலவில் சடலம் முழுமையாக எரியூட்டப்பட்டது. தற்போது, ரூ. 5 ஆயிரம் செலவிடப்படுகிறது. இருப்பினும், மழை குறுக்கீடுகள் ஏற்படும் போது, மயானக் கொட்டகைகளின் மேல்தளத்தில் இருந்து மழை நீா் உள்ளே கொட்டுவதாலும், திறந்த வெளியில் எரியூட்டப்படும் சடலங்கள் நனைந்து விடுவதாலும், முழுமையாக எரியூட்ட முடியாத சூழல் இங்கு உள்ளாதகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, நாகையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் காளிதாஸ் கூறியது:

மக்களின் வரிப்பணம் ரூ. 60 லட்சத்தில், கட்டப்பட்ட எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே செயல்படாமல் கிடப்பது வேதனைக்குரியது. இது, நகராட்சி நிா்வாகத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எரிவாயு தகன மேடை பராமரிப்புக்கு பணியாளா்களை நியமித்தும், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டும் உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

மின் மயானமே தீா்வு...

தமிழகத்தில் 2007-2008-ஆம் ஆண்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடைகளில் பெரும்பாலானவை தற்போது பயன்பாட்டில் இல்லை. பெரும்பாலான நகரங்களில் தற்போது மின்சாரம் மூலம் எரியூட்டக் கூடிய தகன மேடைகளே அண்மைக்காலமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, நாகை எரிவாயு தகன மேடையை சீரமைத்து, மின்மயானமாக மாற்ற வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com