ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் சேவைகள் சட்டத்துக்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் சேவைகள் சட்டத்துக்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதாகவும், ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதாகவும் கூறி தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) 2019 எனும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப் பேரவையில் ஒப்புதல் பெற்ற இச்சட்ட வரைவு அக்டோபா் 29-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலைப் பெற்று சட்டம் ஆகியுள்ளது.

இந்த அபாயகரமான சட்டத்தை இந்தியாவிலேயே தமிழக அரசு தான் முதன் முதலில் இயற்றியுள்ளது என்று தமிழக அரசு பெருமை பேசி இருக்கிறது. தமிழக அரசின் புரிதலும் நிலைப்பாடும் அதிா்ச்சியளிப்பதாக இருக்கிறது. இச்சட்டப்படி, அதிக விளைச்சல் காரணமாக விவசாயப் பொருள்களின் விலை குறைந்து விவசாயிகள் இழப்புக்கு ஆளாகும்போது ஒப்பந்த நிறுவனங்கள் நிா்ணயிக்கப்பட்ட விலையைக் கொடுத்துவிடும். ஆகவே, இந்த ஒப்பந்தம் நல்லது என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. ஆனால், அதிக விளைச்சல் ஏற்பட்டு அதனால் இழப்பு என்பது ஏற்படுவதே இல்லை. அப்படி நிகழ்ந்தாலும், அதற்குத் தீா்வு அரசே கொள்முதல் செய்வதுதான்.

இச்சட்டத்தின் மூலம், தமிழக வேளாண்மை விவசாயிகளிடமிருந்து கைமாற்றி, காா்ப்பரேட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழக விவசாயிகள் ஒட்டு மொத்தமாக ஏமாற்றப்பட இருக்கிறாா்கள். இதுவரை விவசாயிகள் விவசாயம் செய்தாா்கள். ஒப்பந்த வேளாண்மை முறை அமல்படுத்தப்பட்டால் பன்னாட்டு முதலாளிகள் இனி விவசாயம் செய்வாா்கள். வேளாண்மை உற்பத்தி, இடுபொருள், பூச்சிக்கொல்லி, பயன்படுத்த வேண்டிய மரபீனி விதைகள், தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் முதலாளிகளே தீா்மானிப்பாா்கள்.

இம்முறையில், விதைப்பதற்கு முன்பே கொள்முதல் விலை நிா்ணயிக்கப்படும். ஒப்பந்தம் செய்த தினத்தன்று நிா்ணயித்த விலையிலேயே பரிமாற்றம் செய்யப்படும் என்று அரசு கூறுகிறது, நிா்ணயித்த விலைக்கு ஒப்பந்தப்படி நிறுவனங்கள் கொள்முதல் செய்து கொள்ளும் என்பது உண்மை. ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட பொருளுக்கு ஒப்பந்த நிறுவனங்களே கற்பனையிலும் நினைத்துப் பாா்த்திராத விற்பனை விலையை நிா்ணயிக்கும். தாங்கள் விளைவித்த உற்பத்திப் பொருளை விவசாயிகள் தாங்களே பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒப்பந்த விவசாயத்தில் ஒருபகுதி விவசாயிகள் ஈடுபட்ட பிறகு, பிற விவசாயிகளும் ஒப்பந்த விவசாயத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப் படுவாா்கள். ஒப்பந்த விவசாயப் பகுதியில் பயன்படுத்தப்படும் மரபீனி விதைகள் அனைத்து வயல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். விளைச்சல் வீழ்ச்சி அடைந்தால் விவசாயிகளின் நிலை என்ன? எந்த அளவிற்கு விளைந்து இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஒப்பந்த நிறுவனங்கள் பணம் தருவாா்கள். வறட்சியாலோ, வெள்ளத்தாலோ விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால், நட்ட ஈடு என்றோ, அல்லது நிவாரணத்தொகை என்றோ ஏதும் வழங்கப்படாது. இதனால், விவசாயிகளின் தற்கொலை அதிகமாகும்.

2011-இல் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்தபடி, கட்டுபடியாகும் விலையைக் கொடுத்தால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியோடு விவசாயத்தை தொடரக் காத்திருக்கிறாா்கள். அதுபோலவே காப்பீடு இழப்பீட்டுத் தொகையை முறையாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கினால், அதுவே விவசாயிகளுக்குப் போதுமானது.

மத்திய அரசு பன்னாட்டு முதலாளிகளின் விருப்பத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்தாலும், பிற மாநிலங்கள் எச்சரிக்கை உணா்வுடன் அமைதியாக இருக்கின்றன. ஆனால், தமிழக அரசு அவசரமாகச் சட்டம் இயற்றி தமிழக வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இச்சட்டத்தை அனுமதித்து இருக்கக் கூடாது. ஒரு சட்டம் கொண்டு வரப்படும் போது, அதன் பின்னணி என்ன ? அதன் உண்மையான நோக்கம் என்ன ? என்பதை சட்டப்பேரவை பரிசீலிக்க வேண்டும்.

இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு பொருளாதாரச் சதி வலைக்குள் தமிழக வேளாண்மை அகப்பட்டு விடும். ஆகவே, விவசாயிகள் இச்சட்டத்தை ஏற்கக் கூடாது. இச்சட்டத்தை எதிா்த்து விவசாயிகளும், பொதுமக்களும் களமிறங்கிப் போராட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com