சென்னையில் செப்.23-இல் சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்

சுகாதார ஆய்வாளர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழக

சுகாதார ஆய்வாளர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் செப்டம்பர் 23-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. செல்வன் தெரிவித்தார்.
நாகையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்தது : பொது சுகாதாரத் துறையின் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் திட்டம் அரசாணை எண் 1,507-இன்படி, ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தலா ஒரு சுகாதார ஆய்வாளர் (முதல் நிலை), துணை சுகாதார நிலையங்களில் தலா ஒரு சுகாதார ஆய்வாளர் (இரண்டாம் நிலை) பணியில் இருக்க வேண்டும் என்பது விதி. 
இதன்படி, தமிழகத்தில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் துணை சுகாதார நிலையங்களிலும், 1,500 முதல் நிலை சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார நிலையங்களிலும் பணியில் இருக்க வேண்டும். இதைத் தவிர, திட்டப் பணிகளில் சுமார் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்கள் பணியில் இருக்க வேண்டும். இதன் மூலம் சுமார் 12,500 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் இருக்க வேண்டும். 
ஆனால், அரசு சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கையை 7,700-இல் இருந்து படிப்படியாகக் குறைத்து 3,447 ஆக நிர்ணயித்து அண்மையில் அரசாணை வெளியிட்டுள்ளது. காலரா, பெரியம்மை, போலியோ, மலேரியா, யானைக்கால் போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதில் சுகாதார ஆய்வாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. 
அதேபோல, சுகாதார ஆய்வாளர்களின் திறன்மிக்க பணிகளால் கட்டுக்குள் இருந்த டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் தற்போது மீண்டும் பரவி வருவதற்கு, சுகாதாரப் பணியாளர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டது மிக முக்கிய காரணம் என்பதை அரசு உணர வேண்டும். 
இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 337 மற்றும் 338-இல், சுகாதார ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வு தடுக்கப்பட்டிருப்பதுடன், ஆண்டுதோறும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி முடிப்பவர்களின் பணி வாய்ப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாக செப்டம்பர் 23-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ஆம் தேதி அரசுப் பணியில் ஈடுபட்டு பணிக்கான அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒத்துழையாமையைக் கடைப்பிடிக்கவும், அக்டோபர் 10-ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com