இருசக்கர வாகன மானியத் திட்டத்துக்கு  அக். 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் இருசக்கர வாகன மானியத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவர்கள் அக்டோபர் 9-ஆம் தேதி

தமிழக அரசின் இருசக்கர வாகன மானியத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவர்கள் அக்டோபர் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 2018-2019-ஆம் ஆண்டில் தகுதியான பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவான தொகையோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதல் மானியம் 
வழங்கப்படும்.
நலவாரியங்களில் பதிவு பெற்றவர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஊராட்சி குழுக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பிரதிநிதிகள், மக்கள் கற்றல் மையங்களில் பணியாற்றுவோர், வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிகளில் உள்ள மகளிர் இத்திட்டத்தில் பயன் பெற 
விண்ணப்பிக்கலாம்.
பயனாளிகள் 18 முதல் 40 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். குடும்பத் தலைவியாக உள்ள மகளிர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பிறந்த தேதி, இருப்பிடம், வருமானம், சாதி, பணியாற்றுவதற்கான ஆதாரம் ஆகியவற்றுக்கான சான்றுகளையும், ஆதார் அட்டை, கல்வித் தகுதிச் சான்று, கடவுச்சீட்டு அளவு (பாஸ்போர்ட்)  புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றை இணைத்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டிப்பு...
இத்திட்டத்தில் பயன்பெற ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விண்ணப்பக் காலம் அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com