மண் வளத்தை பாதுகாக்க விளைநிலங்களில் ஆட்டுக்கிடை: சீர்காழி விவசாயிகள் ஆர்வம்

மண் வளத்தை பாதுகாக்க விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைப்பதில் சீர்காழி பகுதி விவசாயிகள் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர். 
மண் வளத்தை பாதுகாக்க விளைநிலங்களில் ஆட்டுக்கிடை: சீர்காழி விவசாயிகள் ஆர்வம்

மண் வளத்தை பாதுகாக்க விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைப்பதில் சீர்காழி பகுதி விவசாயிகள் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர். 
விவசாயத்தில் ரசாயன இடுபொருள்கள் பயன்படுத்தாததுக்கு முன்பு விளைநிலங்கள் அனைத்து சத்துக்களும் மிகுந்து வளமாக உணவு தானியங்களை விளைவித்து கொடுத்தன. மக்கள் தொகை அதிகரிப்பு, உணவு பொருள்களின் தேவை அதிகரிப்பு இவற்றால் விரைவான உற்பத்திக்கு ரசாயன மருந்துகளை பயன்படுத்த தொடங்கினோம். விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு புகுத்தப்பட்ட ரசாயன இடுபொருள்களின் பயன்பாட்டால் தற்போது விளைநிலங்கள் அனைத்து மாசுபட்டு, விஷத்தன்மையாக மாறியுள்ளது.
இதன் விளைவாக நிலம் மட்டுமல்ல நீர், காற்று மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு விளைநிலங்களில் வாழ்ந்து வரும் நன்மை தரும் பூச்சி, புழுக்களும் அழிந்துவிட்டன. இப்படி, நிலம், நீர், காற்று மாசடைந்ததால், இயற்கை முறை வேளாண்மையில் கிடைத்த மகசூலை இழந்ததுடன், விஷ உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
உணவே மருந்து என திருமூலரின் வாக்குக்கு ஏற்ப முன்னோர்கள் இயற்கை முறை தானியங்கள், பாரம்பரிய விவசாய நெல் ரகங்களை விளைவித்து மற்றவர்களுக்கும் கொடுத்து தாங்களும் உண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அவசர யுகத்தில் எதற்கும் காத்திருக்க மக்கள் தயங்குவதால் பல மாதங்கள் பக்குவமாக வளர வேண்டிய நெல்லையும் அதிக உரம், ராசயனம் என வயலில் கொட்டி,கொட்டி வயலையும், மண்ணையும் கெடுத்து அதில் விளையும் தானியங்களை சாப்பிட்டு நம் உடம்பையும் கெடுத்துக் கொண்டுள்ளோம். 
இதனால், மக்கள் தங்களின் வளமான வாழ்க்கையை இழந்து உடலில் பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டு சுகாதாரமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். 40வயதிலேயே பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவுநோய்,இரத்தகொதிப்பு,இதயநோய் போன்ற பலவீனமான நோய்கள் அதிகம் தென்படுகிறது. இதற்கு இதற்கெல்லாம், ரசாயன இடுபொருள்களின் பயன்பாட்டால் விளைநிலங்கள் விஷமாக, அதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு சாப்பிடும் உணவுப் பொருள்களே காரணம் என்று சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. எனவே, ரசாயான விவசாயத்தை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளை வருங்கால சங்கதியினர் தவிர்க்க முடியும்.
அந்த வகையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயிகளின் கருத்துகளால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்தை நாடி அதை செயல்படுத்தி வருகின்றனர். நிலத்தை பண்படுத்தவும், விளைநிலம் விஷத்தன்மையை நீக்கி மண் வளம் பெறவும் இயற்கை முறையான கால்நடை எச்சங்களை பயன்படுத்துவது, செடி, கொடிகளை விவசாயத்துக்கு பயன்படுத்துவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 
இதற்கிடையில், விவசாயிகள், பொதுமக்கள் மீண்டும் பழைமைக்கு திரும்பும் விழிப்புணர்வு வரத்தொடங்கியுள்ளது. செக்குமர எண்ணை, பாரம்பரிய நெல், அரிசி உணவுகள் போன்றவற்றை மக்கள் அதிகம் நாடி செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாய நிலங்களையும் ராசயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தி பண்படுத்தும் நிலையை தவிர்த்து முந்தைய இயற்கை முறையில் நிலத்தை பண்படுத்தும் வகையில் ஆட்டுக்கிடை அமைக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் விவசாயிகள். 
அந்த வகையில், நாகை மாவட்டம், சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில், விளைநிலத்தை வளமான மாற்றும் வகையில், முன்னோர்கள் கடைபிடித்த ஆட்டுக்கிடை அமைக்கும் முறையை தற்போது ஆர்வமுடன் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். சீர்காழி அருகேயுள்ள காரைமேடு, திருவாலி, சூரக்காடு, மங்கைமடம், கீழசட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோயில், தென்னலக்குடி, காத்திருப்பு, செம்பதனிருப்பு போன்ற கிராமங்களில் விவசாய நிலங்களில் ஆட்டுக்கிடை அமைத்து தங்களது விளைநிலத்தை பண்படுத்தி வளமாக மாற்ற விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.
இதற்காக ராமநாதபுரத்திலிருந்து சுமார் 800ஆடுகள் சீர்காழி பகுதிக்கு விவசாய நிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்க   வந்துள்ளன. இந்த ஆட்டுக்கிடை அமைக்க நாள் ஒன்றுக்கு ரூ. 600 முதல் ஆட்டுக்கிடை உரிமையாளர்கள் கூலி பெறுகின்றனர். விளைநிலங்களில் 60-க்கு 30 அடி போன்ற பல்வேறு அளவில்  வலையால் வேலி அமைத்து கிடை அமைக்கின்றனர். 
முழு விளச்சலில்...
இதுகுறித்து, இயற்கை விவசாயி அகரவட்டாரம் எஸ். வரதராஜன் கூறியது: நிலத்தை பண்படுத்த இயற்கை முறையில் ஆட்டுக்கிடை அமைப்பது சிறப்பானதாகும். இந்த முறையில் ஒரு ஏக்கர் நிலத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் தங்க வைத்து மறுநாள் அடுத்த பகுதி நிலத்தில் விடப்படும். இதனால், விவசாய நிலங்கள் முழுவதும் பரவலாக சாணம், சிறுநீர் காணப்படும்.
இதை உழவு செய்யும்போது, நிலத்துடன் கலந்து இயற்கை உரமாக மாறி நிலத்துக்கு சத்துக்களை தருகின்றன. 
இதில் விளைவிக்கப்படும் பயிர்கள் நன்கு வளர்வதுடன் தரமானதாகவும், முழுவிளைச்சலையும் அடைகிறது. இந்த முறையில் விளைவிக்கப்படும் பயிர்கள், தானியங்களை சாப்பிடுபவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. ஒரு முறை 'கிடை' அமைத்து விட்டால் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு நிலங்கள் நல்ல உரச்சத்துடன் இருக்கும் என்றார் அவர். 
நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் ரா. சுதாகர் கூறியது: குறுகிய கால உழைப்பு அதிக விளைச்சல் போன்ற விளம்பர யுக்திக்கு விவசாயிகள் ஆட்ப்பட்டதன் விளைவு இயற்கை பாரம்பரியத்தை மறந்து ரசாயன உரத்தை  நாடத்தொடங்கினோம். இதனால், உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே மெதுவாக கொல்லும் விசமாக மாறும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
தற்போது, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வமும்,விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது. இதற்காக விளைநிலங்களின் தன்மையை மாற்றுவதில் பல்வேறு நடவடிக்கைகளில் நில உரிமையாளர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.  அதில் ஒன்றாக ஆட்டுக்கிடைகளை தங்கள் நிலங்களில் அமைக்க முனைப்பு காட்டுகின்றனர். ஆடுகளின் கழிவுகள் பயிர்களுக்கு நல்ல இயற்கை உரம் என்பதால் இதை விவசாயிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆட்டுக் கிடை உரிமையாளர் கூறியது: திருவண்ணாமலையை பூர்விகமாக கொண்ட நாங்கள், ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 800 செம்மறி ஆடுகளை சீர்காழி பகுதிக்கு கொண்டு வந்துள்ளோம்.  ஒரு இடத்தில் ஆட்டுக்கிடை அமைக்க அழைப்பு வந்தால் அங்கு வலையால் வேலி அமைத்து அதில் ஆடுகளை விட்டு விடுவோம். பகலில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், இருள் சூழ்ந்ததும் அந்த வலை வேலிக்குள் ஆடுகளை அடைத்து விடுவோம்.
ஒவ்வொரு வயலிலும் அதிகபட்சம் 10 நாட்கள் வரை தங்கியிருப்போம். ஆடுகள் கிடைப்போட்டுள்ள பகுதியிலேயே நாங்களும் சிறு குடில் அமைத்து தங்கிக் கொள்வோம். ஆட்டு வாடைக்கு பாம்பு வராது. 
இந்த ஆடுகளை இறைச்சிக்காக வளர்க்க மாட்டோம். கிடை போடவே வைத்துள்ளோம். இதை பார்க்கும் மற்ற பகுதி விவசாயிகளும் எங்களை தொடர்புக் கொண்டு அவர்கள் வயலுக்கும் கிடை அமைக்க அழைத்து செல்வர். ஒரு பகுதிக்கு சென்றால் அங்கு 1 மாதம் வரை தங்கியிருப்போம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com