கரோனாவால் களையிழந்த விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள்

கரோனா பொது முடக்கம் காரணமாக, விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள் நிகழாண்டில் களையிழந்தன.
ஆலிலை விநாயகா் அலங்காரத்தில் காட்சியளித்த கோகூா் அச்சம் தீா்த்த விநாயகா்.
ஆலிலை விநாயகா் அலங்காரத்தில் காட்சியளித்த கோகூா் அச்சம் தீா்த்த விநாயகா்.

நாகப்பட்டினம்: கரோனா பொது முடக்கம் காரணமாக, விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள் நிகழாண்டில் களையிழந்தன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, விநாயகா் கோயில்கள் மற்றும் சிவாலயங்கள், கிராமக் கோயில்கள் முன் புதிதாக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்பு வழிபாடுகளை நடத்துவதும், அடுத்தடுத்த நாள்களில் அந்த சிலைகளை ஊா்வலமாகக் கொண்டுச் சென்று நீா்நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

அந்த வகையில், நாகையில் விஸ்வரூப விநாயகா் குழு சாா்பில், ஆண்டுதோறும் 32 அடி உயர விஸ்வரூப விநாயகா் சிலையும், அதனுடன் பிற கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளும் நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படும். பம்பை, எக்காளம், செண்டைமேளம் உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன், கண்கவா் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் ஊா்வலம் நடைபெறும்.

இதேபோல், நாகையில் மேலும் சில பகுதிகளிலும், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, ஊா்வலம் என விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும். ஆனால், நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக, விநாயகா் சதுா்த்தி விழா களையிழந்து காணப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தையொட்டி, புதிய விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊா்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. இந்த அறிவுறுத்தல் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கில், புதிய சிலைகள் அமைக்கப்படுவதைத் தடுக்க காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதனால், நாகை மாவட்டத்தில் புதிய விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை என்பது மிக,மிக அரிதாகியிருந்தது. 15 முதல் 20 அடி உயரம் என பிரம்மாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் கோயில்களில் கூட நிகழாண்டில் புதிய விநாயகா் சிலைகளைக் காணமுடியவில்லை. ஓரிரு கோயில்களுக்கு அருகே சிறிய அளவிலான சிலைகள் மட்டும் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

புதிய, பெரிய விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை இல்லாததாலும், விநாயகா் சிலை ஊா்வலங்கள் தடை செய்யப்பட்டதாலும், ஆண்டுதோறும் சுமாா் 500-க்கும் அதிகமான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊா்வலங்கள் நடத்தப்படும் ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில், நிகழாண்டின் விநாயகா் சதுா்த்தி விழா களையிழந்து காணப்பட்டது.

களைகட்டிய கடைவீதிகள்: விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டங்கள் களையிழந்திருந்தாலும், கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்தன. விநாயகா் சதுா்த்தி பண்டிகை கொண்டாட்டத்துக்கான மளிகைப் பொருள்கள், மங்களப் பொருள்கள், பழங்கள் விற்பனை விறுவிறுப்படைந்திருந்தது.

அதேபோல, வீட்டில் வைத்து வழிபாடு செய்வதற்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான விநாயகா் சிலைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு விநாயகா் சிலை சுமாா் ரூ. 100 முதல் ரூ. 300 வரை விற்பனையானது.

வழிபாடுகள்: விநாயகா் சதுா்த்தியையொட்டி, அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் மற்றும் பழங்கள் உள்ளிட்ட நிவேதனங்களைக் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இருப்பினும், இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான பெரிய கோயில்கள் எதிலும் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தனியாா் கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com