கரோனா: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உப்பு உற்பத்தி முடங்கியுள்ளது.
கரோனா: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உப்பு உற்பத்தி முடங்கியுள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் பகுதியில் உணவு உப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, பஞ்சநதிக்குளம், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் 2 பெரிய தனியாா் நிறுவனங்கள் உள்பட சிறு, குறு உப்பு உற்பத்தியாளா்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் (தை மாத முதல் வாரம்) பொன்னுப்பு எடுத்து பணிகள் தொடங்கப்படும். ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 லட்சம் டன் வரையில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, வெளியிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் வீசிய கஜா புயலால் உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலப்பரப்பில் கடல் களிமண் படிமங்களாகப் படிந்ததாலும், தொழில்சாா்ந்த கட்டமைப்புகள், சாலைகள், மின் பாதைகள் போன்றவை சேதமடைந்ததாலும், உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளை சீரமைக்க அரசுத் தரப்பு உதவிகள் கிடைக்காத நிலையில், நிகழாண்டுக்கான உற்பத்திப் பணிகள் சுமாா் 3,500 ஏக்கா் என்ற குறைவான பரப்பிலேயே தொடங்கி நடந்து வந்தன. கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் இருந்து வந்ததால், உப்பு உற்பத்திக்கு சாதகமாக அமைந்து, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இந்நிலையில், தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுயஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் உப்புத் தொழில் தடைபட்டது. மேலும், இங்கிருந்து உப்பு ஏற்றிச் செல்லும் லாரிகள் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருவதை கருத்தில் கொண்டு, வெளியிடங்களுக்கு உப்பு அனுப்பும் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்ததால், உப்பு உற்பத்தித் தொழில் முடங்கியுள்ளது. இதனால், இத்தொழிலின் மூலம் வேலைவாய்ப்பு பெற்று ந்தோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com