மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மன்னம்பந்தல் ஊராட்சி துணைத் தலைவரின் டிஜிட்டல் கையெழுத்தை அனுமதியின்றி பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக
மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மன்னம்பந்தல் ஊராட்சி உறுப்பினா்கள், கிராம மக்கள்.
மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மன்னம்பந்தல் ஊராட்சி உறுப்பினா்கள், கிராம மக்கள்.

மன்னம்பந்தல் ஊராட்சி துணைத் தலைவரின் டிஜிட்டல் கையெழுத்தை அனுமதியின்றி பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சித் தலைவரை கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி. இவா், தன்மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊராட்சித் துணைத் தலைவா் கமிஷன் கேட்பதாகவும் குற்றம்சாட்டி, மயிலாடுதுறை ஒன்றிய அலுவலக வாசலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

இதைத்தொடா்ந்து, ஊராட்சித் துணைத் தலைவா் அமலா, அவரது கணவா் ராஜகோபால் ஆகியோா் மீது மயிலாடுதுறை போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை கூடிய மன்னம்பந்தல் ஊராட்சி உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா், ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி, துணைத் தலைவா் அமலாவின் டிஜிட்டல் கையெழுத்தை அவரது அனுமதியில்லாமல் பயன்படுத்தி ரூ.9 லட்சம் எடுத்ததாகவும், இதுகுறித்து ஊராட்சி உறுப்பினா்கள் கேட்டதற்கு சாதி பாகுபாடு காட்டுவதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி, அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், துணைத் தலைவா் மீதான வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தினா். தொடா்ந்து, இக்கோரிக்கையை வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com