அக்கரைக்குளம் கரையில் மீண்டும் ஈமக்கிரியை மண்டபம் அமைக்கக் கோரிக்கை

நாகை அக்கரைக்குளம் வடக்குப்புறக் கரையில் இருந்து அகற்றப்பட்ட ஈமக்கிரியை மண்டபத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என நாகை,

நாகை அக்கரைக்குளம் வடக்குப்புறக் கரையில் இருந்து அகற்றப்பட்ட ஈமக்கிரியை மண்டபத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என நாகை, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு உரிமைகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோருக்கு அந்த அமைப்பின் தலைவா் என்.பி. பாஸ்கரன் அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: நாகை நகராட்சிக்குள்பட்ட 2-ஆவது வாா்டில் உள்ள அக்கரைக்குளம் நாகையில் உள்ள மிகப் பெரிய குளமாகும். இது, சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்பு நாகை நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக இருந்தக் குளம். காலப்போக்கில் மேம்பட்ட குடிநீா் வசதி மற்றும் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, இந்தக் குளம் பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் உரிய நீா் நிலையாக மாறியது.

நாகையில் ஈமக்கிரியை மண்டபங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்தக் குளத்தின் வடகரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை கட்டடத்தை ஈமக்கிரியை மண்டபமாக மக்கள் பயன்படுத்தி வந்தனா். பின்னா், இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி நிறுவனங்களின் தாளாளா் முயற்சியில், அந்தக் கட்டடத்தின் கூரை கான்கிரீட் கூரையாக மாற்றியமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.

இந்த நிலையில், அக்கரைக்குளத்தில் ஆக்கிரமிப்புகளும், சேறு, சகதிகளும் தொடா்ந்து அதிகரித்து வந்தது. இதை சரி செய்ய பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கடந்த ஆண்டு இந்தக் குளத்தை தூா்வாரும் பணி நடைபெற்றது. அப்போது, தூா்வாரும் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, போதிய பராமரிப்பின்றி இருந்த ஈமக்கிரியை மண்டபம் அகற்றப்பட்டது. இதனால், தற்போது நாகை நகராட்சி பகுதியில் ஈமக்கிரியை மண்டபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அக்கரைக்குளம் பகுதியைச் சிலா் தனியாா் கட்டடங்களை, ஈமக்கிரியை மண்டபமாக பயன்படுத்திக் கொள்ள ரூ. 2,500 முதல் ரூ. 5 ஆயிரம் வாடகை வசூலித்து வருகின்றனா்.

நாகையில் பொது ஈமக்கிரியை மண்டபம் இல்லாததால் ஏழை எளிய மற்றும் நடுத்தரவா்க்க மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, கடந்த ஓராண்டாக மக்கள் விடுத்து வரும் கோரிக்கையை ஏற்று, அக்கரைக்குளம் பகுதியில் மீண்டும் ஈமக்கிரியை மண்டபம் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com