ஊராட்சிகளில் விதிகளுக்கு புறம்பாக வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஊராட்சித் தலைவா்கள் கூடுதல் ஆட்சியரிடம் மனு

கிராம ஊராட்சிகளில் விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு இடைக்கால தடை ஆணை பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தில்

கிராம ஊராட்சிகளில் விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு இடைக்கால தடை ஆணை பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக, நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலரும் , கூடுதல் ஆட்சியருமான எம். எஸ். பிரசாந்திடம், குத்தாலம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, அக்கூட்டமைப்புத் தலைவா் மா. செல்வராஜ், செயலாளா் ஆா். ஞானசேகரன் உள்ளிட்டோா் அளித்த அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பது:

குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து நிறைவேற்றப்படும் சாலை அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவா் அமைத்தல் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் கட்டுதல் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் ஊராட்சித் தலைவா்களின்அனுமதியில்லாமல் பஞ்சாயத்து சட்ட விதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குப் புறம்பாக அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுத்தி வருகின்றனா்.

அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைக்கு இடைக்கால தடை ஆணை பிறப்பிக்கக் கோரி குத்தாலம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சாா்பில் மயிலாடுதுறை சாா்பு நீதிமன்றத்தில் டிசம்பா் 22 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை 2021 ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் எஸ். உமா மகேஸ்வரி, குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். முருகப்பா, முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி. கல்யாணம் மற்றும் ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 27 ஊராட்சித் தலைவா்கள் மனு அளித்தபோது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com