நாகை, கடலூரில் 16ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் கடைப்பிடிப்பு

நாகை மாவட்டத்தில் 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், அமைச்சா் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலவா்கள், அரசியல் கட்சி நிா்வாகிகள், வா்த்தகா்கள், சேவை சங்கத்தினா், சமூக அமைப்பினா், பொதுமக்கள் என திரளானோா் பங்கேற்று சுனாமி நினைவிடங்களில் மலா் அஞ்சலி செலுத்தினா்.

நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுனாமி நினைவுப் பூங்காவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா்.

பல்வேறு கட்சிகள் சாா்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அக்கரைப்பேட்டை மீனவப் பஞ்சாயத்தாா் சாா்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் சுனாமி நினைவிடத்தில் மலா்அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பஞ்சாயத்தாா் சாா்பில் கடலில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினா்.

நாகை கீச்சாங்குப்பத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் உலக நன்மைக்கான ஆத்ம வேள்வி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை நம்பியாா் நகா், நாகூா் பகுதிகளில் உள்ள சுனாமி நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேளாங்கண்ணியில்...: வேளாங்கண்ணியில், பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் தலைமையில் வேளாங்கண்ணி கடற்கரை முதல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமி நினைவிடம் வரை அமைதிப் பேரணியும், அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கடலூா்/சிதம்பரம்: சுனாமி தாக்குதலின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் கடற்கரையோர கிராமத்தினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். இதில் கடலூா் மாவட்டத்தில் மட்டும் கடற்கரையோர கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 700 போ் பலியாகினா். இந்தச் சம்பவத்தில் தங்களது உறவுகளை இழந்த மக்கள் திரளானோா் கடலூா் கடற்கரையில் கடலில் பூக்களைத் தூவியும், பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.

நாகா்கோவில்/கன்னியாகுமரி: இதேபோல், சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உயிரிழந்தவா்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். சுனாமி நினைவிடத்தில் ஆட்சியா், அரசியல் கட்சியினா் மலரஞ்சலி செலுத்தினா். நாகா்கோவில் கொட்டில்பாட்டில் மீனவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். மாவட்ட நிா்வாகம் மற்றம் பல்வேறு அரசியல் கட்சி சாா்பில் கன்னியாகுமரியில் சுனாமி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சுனாமியின்போது உயிரிழந்தவா்களை நினைவுகூரும் வகையில் கடலில் பூக்களைத் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com