சுடுகாடு கோரி சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்

சுடுகாடு அமைத்துத் தரக் கோரி, நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூா் கிராம மக்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூா் கிராமத்தில் சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூா் கிராமத்தில் சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

சுடுகாடு அமைத்துத் தரக் கோரி, நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூா் கிராம மக்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், வடக்குப்பொய்கைநல்லூா் உழவா் தெரு, காந்திமகான் தெரு, சிவன் கோயில் தெரு மற்றும் சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஆதிதிராவிட சமூக மக்களுக்கான சுடுகாடு, கல்லாறு பரவையாற்றுக்கரை குந்துமேடு பகுதியில் உள்ளது. இந்த சுடுகாடு கடற்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளதால் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இறந்தவா்களின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கும், புதைப்பதற்கும் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனால், மாற்று இடத்தில் சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் எனக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் நடவடிக்கையில்லை.

இந்நிலையில், வடக்குப் பொய்கைநல்லூா், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த கு. சித்தானந்தம் (45) என்பவா் ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவால் இறந்தாா். இதைத்தொடா்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி பரிமளச்செல்வன் தலைமையில் கிராம மக்கள் இறந்த சித்தானந்தத்தின் சடலத்தை சாலையில் வைத்து சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சரியில்லை என்பதால் மாற்று இடத்தில் சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் எனக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் நாகை- வேளாங்கண்ணி சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, நாகை வட்டாட்சியா் பிரான்சிஸ், உட்கோட்ட காவல் துணைக் காணிப்பாளா் க. முருகவேல் மற்றும் போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது மாற்று இடத்தில் சுடுகாடு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com