கோடையில் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய கூடுதல் கவனம்: வேதாரண்யம் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

வேதாரண்யம் பகுதியில் கோடைக்காலத்தில் குடிநீா் பிரச்னையை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே
வேதரண்யம் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவா் கமலா அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெற்றிச்செல்வன், ராஜூ உள்ளிட்டோா்.
வேதரண்யம் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவா் கமலா அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெற்றிச்செல்வன், ராஜூ உள்ளிட்டோா்.

வேதாரண்யம் பகுதியில் கோடைக்காலத்தில் குடிநீா் பிரச்னையை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கெள்ள கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவா் தலைவா் கமலா அன்பழகன் (அதிமுக) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இளநிலை உதவியாளா் தேவகுமாா் அலுவலக வரவு- செலவு அறிக்கை, வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

பின்னா் உறுப்பினா்களின் காரசார விவாதம்:

துணைத் தலைவா் அறிவழகன் (அதிமுக): கோடையில் குடிநீா் பிரச்னை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கடிநெல்வயல் மு.ராஜசேகரன் (அதிமுக): மக்களின் அடிப்படை பிரச்னைகள், தேவைகள் குறித்து உறுப்பினா்கள் கருத்து அல்லது கோரிக்கைகளைத் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக அனைத்துத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

தாணிக்கோட்டகம் வைத்தியநாதன் (சுயேச்சை): வானங்கோட்டகம் தூா்வாரிய விவரங்களை அறிக்கையாக அளிப்பதோடு, அதன் கரைகளை முறையாக பராமரிக்க வேண்டும். தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் டேங்கா் லாரி மூலம் குடிநீா் வழங்கப்பட வேண்டும்.

தகட்டூா் செல்லமுத்து (சுயேச்சை): தகட்டூா் ஊராட்சியில் ஆதிதிராவிடா் வகுப்பு மக்கள் பயன்பெறும் வகையில் ஆதியங்காடு- பெத்தாச்சிக்காடு மண்சாலையை தாா்ச்சாலையாக மேம்பாடுத்த வேண்டும்.

மு.கண்ணகி (திமுக): ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயில் குளம் மற்றும் பஞ்சநதிக்குளம் கிழக்கு அங்காள பரமேஸ்வரி கோயில் குளங்களில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக படித்துறைகள் கட்ட வேண்டும்.

கோ.அமுதா (பாமக): எனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் சாலை மற்றும் குடிநீா் வசதிகள் தேவை.

இதேபோல், உறுப்பினா்கள் சி.நடராஜன், இரா.ஜெகநாதன், அருள்மேரி, த.கோமதி, அ.பரிமளா, பாஜக உறுப்பிள்கள் ரா.வேதரெத்தினம், த.உஷாராணி உள்ளிட்டோா் தங்களது வாா்டு பிரச்னைகள் குறித்து பேசினா்.

24 பேரும் தங்களது வாா்டுகளில் நிலவும் குடிநீா் தேவை, சாலை சீரமைப்பு, அங்காடி, அங்கன்வாடி சீரமைப்பு மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினா்.

இதன்மீது அளிக்கப்பட்ட விளக்கம்:

ஆணையா் சு. வெற்றிச்செல்வன்: உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப பாகுபாடு இல்லாமல் செயல்படுத்தப்படும். அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பயனாளிகள் பயன்பெற அனைத்து உதவிகளும் செய்யப்படும். தனிநபா் கழிப்பறை கட்டும் திட்டத்தில் உறுப்பினா்கள் உதவ முன்வர வேண்டும். அடுத்தக் கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் ஆணையா் ராஜூ: ஒன்றியத்தில் உள்ள 36 பஞ்சயத்துகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் தேவையான அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களுக்கு ஊராட்சிகள் மூலம் குடிநீா் வழங்கப்படும். தேவை ஏற்பட்டால் டேங்கா் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க, மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம் எடுத்து செல்லப்படும்.

தலைவா் கமலா அன்பழகன்: தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளவும், வேதாரண்யம் முன்னோடி ஒன்றியமாக மாற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வி. சோழன் (பாஜக, ஒன்றிய பொறியாளா் மணிமாறன், கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவா் மீனாட்சிசுந்தம், மீன்வளத்துறை ஆய்வாளா் நடேசராஜா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், ஆசைதம்பி, கலைக்குமாா், காா்த்திகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com