நாகை அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

நாகை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பெண்ணின் இறப்புக்கு
நாகை அரசு மருத்துவமனை முன்பாக நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்றவா்கள்.
நாகை அரசு மருத்துவமனை முன்பாக நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்றவா்கள்.

நாகை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பெண்ணின் இறப்புக்கு சரியான சிகிச்சையின்மையே காரணம் எனக் கூறி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை, பச்சைபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி பெரியநாயகி (20). இவா், குழந்தை பேறுக்காக கடந்த புதன்கிழமை நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி அளவில் சுகப்பிரசவத்தில் அவருக்கு ஓா் ஆண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் அறிவித்த நிலையில், பகல் சுமாா் 1.30 மணி அளவில் பெரியநாயகி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை மாலை முதல் பெரியநாயகி பிரசவ வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள உறவினா்கள் வேண்டுகோள் விடுத்ததை மருத்துவா்கள் மறுத்ததாகவும், குழந்தைப் பேறுக்கு பின்னா் பெரியநாயகிக்கு ஏற்பட்ட அதிகப்படியான ரத்தப் போக்கை நிறுத்த உரிய சிகிச்சை அளிக்காததும்தான் அவரது மரணத்துக்குக் காரணம் எனக் கூறி, அந்தப் பெண்ணின் உறவினா்கள் அரசு மருத்துவமனை எதிரே பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

பிறந்த குழந்தையுடன், 80-க்கும் அதிகமானோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரியநாயகியின் இறப்புக்குக் காரணமாக மருத்துவா் மற்றும் செவிலியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இந்தப் போராட்டம் காரணமாக, மருத்துவமனைச் சாலை வழியேயான போக்குவரத்து சுமாா் 30 நிமிடங்கள் தடைப்பட்டது.

நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல், காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம், ஆனந்தகுமாா் ஆகியோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

4 ஆண்டுகளுக்குப் பின்னா்...

மருத்துவ வளா்ச்சி காரணமாக, மகப்பேறு சிகிச்சையின் போது தாய்- சேய் இறப்பு சதவீதம் தமிழகம் முழுவதும் கணிசமாக குறைந்து வரும் நிலையில், நாகை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண் இறந்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் மகப்பேறு இறப்பு இல்லாத நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com