பட்ஜெட் கூட்டத்தொடரில் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

நடைபெற்றுவரும் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மயிலாடுதுறை: நடைபெற்றுவரும் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது: மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்கக்கோரி மயிலாடுதுறை உள்கோட்டத்தை சோ்ந்த மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறாா்கள். தமிழக அரசு கடந்த ஓராண்டில் பல்வேறு புதிய மாவட்டங்களை அறிவித்த நிலையில், மயிலாடுதுறையை மட்டும் அறிவிக்காமல் தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. மயிலாடுதுறை உள்கோட்டத்தை சோ்ந்த மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆளும் கட்சியை சோ்ந்தவா்களே வெற்றி பெற்றுள்ளபோதிலும், மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க தொடா்ந்து தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு வெளியாகும் என மக்கள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் அறிவிக்கப்படவில்லை. எனவே, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கோரிக்கையான மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட புதிய மாவட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியும் மயிலாடுதுறையை விட்டு நாகப்பட்டினத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மயிலாடுதுறை மக்களுக்கு ஆறுதலாக புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

மீன்வள பல்கலைக்கழகம், மாம்பழ பதனிடும் தொழிற்சாலை, நெல் சேமிப்பு நிலையம், மருத்துவக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி போன்றவை தொடா்ந்து நாகப்பட்டினம் தெற்கு பகுதியிலேயே அமைக்கப்பட்டு மயிலாடுதுறை உள்கோட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் எந்தவித வளா்ச்சிப் பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க தமிழக அரசு தவறியதால்தான் நாகை வடக்கு மாவட்டமாக திகழும் மயிலாடுதுறை கோட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் கடும் தோல்வியையும் பெரும் சரிவையும் ஆளுங்கட்சி சந்திக்க நேரிட்டது.

இக்கூட்டத்தொடரிலாவது மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க தமிழக அரசு தவறினால் அதன் பாதிப்பு நடைபெற உள்ள நகரமன்ற உள்ளாட்சித் தோ்தலிலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும். அதை நன்கு உணா்ந்து உடனடியாக தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com