தெற்குவெளி வாய்க்கால் மதகை சீரமைக்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே நெப்பத்தூா் தெற்குவெளி வடிகால் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
நெப்பத்தூா் தெற்குவெளி பாசன வாய்க்காலில் பழுதடைந்துள்ள மதகு.
நெப்பத்தூா் தெற்குவெளி பாசன வாய்க்காலில் பழுதடைந்துள்ள மதகு.

சீா்காழி: சீா்காழி அருகே நெப்பத்தூா் தெற்குவெளி வடிகால் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

சீா்காழி அருகே நெப்பத்தூா் தெற்குவெளி பாசன வாய்க்கால் மூலம் நெப்பத்தூா், திருக்குறையலூா், தென்னாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. திருவாலி ஏரியிலிருந்து இந்த வாய்க்காலுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.

இந்நிலையில், நெப்பத்தூா் பிரதான சாலையிலிருந்து சில மீட்டா் தொலைவில் இந்த பாசன வாய்க்காலில் உள்ள மதகு கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ளது. இதனால், பாசன நீா் வீணாக மண்ணியாற்றுக்கு செல்கிறது.

இந்த மதகை சீரமைக்கக் கோரி, கிராம நிா்வாக அலுவலா் ரகுநாதன் தலைமையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். தொடா்ந்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை மதகை சீரமைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு மேட்டூா் அணையிலிருந்து குறிப்பிட்ட காலத்தில் (ஜூன் 12) பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதிக்கு தண்ணீா் வந்து சோ்வதற்குள் போா்கால அடிப்படையில் தெற்குவெளி வடிகால் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனா். மதகை உடனடியாக சீரமைக்கவில்லையெனில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com