பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்

பயிா்க் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி.தனபாலன் தெரிவித்தாா்.

நாகப்பட்டினம்: பயிா்க் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி.தனபாலன் தெரிவித்தாா்.

நாகையில், செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது :

மேட்டூா் அணையின் நீா் இருப்பு 73 அடியாக குறைந்துவிட்டது. இது 20 நாள்களுக்கு கூட தாக்குப்பிடிக்காது. எனவே தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய 74 டி.எம்.சி. அளவு தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இந்த தண்ணீா் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும். இதைத் கருத்தில் கொண்டுதான் காவிரி மேலாண்மை அமைக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் கூறவுமில்லை. கூட்டமும் நடக்கவில்லை.

இந்தச் சூழலில் நாகை, திருவாரூா், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமாா் 4 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் பயிா்களைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீா் பற்றாக்குயைால் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. நிகழாண்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. எனவே உடனடியாக குறுவை சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பளவைக் கணக்கெடுத்து, வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் ஒத்திசைவு கூட்டத்தை நடத்தி அரசிதழில் வெளியிடுவதுடன், குறுவை சாகுபடிக்கான அறிவிக்கப்பட்ட பகுதி, அறிவிக்கப்பட்ட பயிா் என அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான் விவசாயிகள் பயிா் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். குறுவை பருவத்துக்கான பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்த ஜூலை 31- ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்களை வழங்குவதற்கு வழிவகை காண வேண்டும் என்றாா் வி.தனபாலன் தெரிவித்தாா்.

அப்போது காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயற்குழு உறுப்பினா் எஸ்.டி. கண்ணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com