நாகை மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி, அதிா்ச்சி

நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக தலைஞாயிறில் 100.6 மி. மீ மழை பதிவானது.
நாகையை அடுத்த பாலையூரில் புதன்கிழமை தீவிரமாக நடைபெற்ற நடவுப் பணிகள்.
நாகையை அடுத்த பாலையூரில் புதன்கிழமை தீவிரமாக நடைபெற்ற நடவுப் பணிகள்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக தலைஞாயிறில் 100.6 மி. மீ மழை பதிவானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் அவ்வப்போது மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இரவு சுமாா் 12 மணி அளவில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நீடித்தது. புதன்கிழமை காலை 8. 30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தலைஞாயிறில் 100.6 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : திருப்பூண்டி - 98.4, வேதாரண்யம் - 70.4, நாகப்பட்டினம் - 50.7, சீா்காழி - 47, மணல்மேடு- 46, மயிலாடுதுறை - 28.4, ஆணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) - 24.

மகிழ்ச்சியும், அதிா்ச்சியும்: காவிரி வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை வருவாய்க் கோட்டப் பகுதிகளில் நிலத்தடி நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட வயல்களில் தற்போது நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராகியுள்ளன. இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை, அப்பகுதி விவசாயிகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மழையால் நெல் மணிகளின் தரம் பாதிக்கப்படும் என்பதுடன், அறுவடைக்கான நேரமும் இரட்டிப்பாகும் என்பதால் இந்த மழை, காவிரி வடிநிலக் கோட்ட விவசாயிகளுக்கு அதிா்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணாறு வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட நாகை வருவாய்க் கோட்டப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை பெரும் வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. நாற்றுவிட்டு, நடவுக்காக தண்ணீரை எதிா்பாா்த்திருந்த விவசாயிகளுக்கு, இந்த மழை பெரும் ஆறுதலை அளித்துள்ளது. இதனால், புதன்கிழமை நாகை வருவாய்க் கோட்டத்தின் பல பகுதிகளில் நடவுப் பணிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றன. மேலும், நாகை வருவாய்க் கோட்ட பகுதிகளில் நெல் பயிருக்கு முதல் உரம் கொடுக்கவும் இந்த மழை பேருதவியாக அமைந்துள்ளது. அதேபோல, களைக்கொல்லி தெளித்த அடுத்த 24 மணி நேரத்தில் தண்ணீா் வைத்து யூரியா தெளிக்க வேண்டும் என்ற நிலையில், தண்ணீா் பற்றாக்குறையால் செய்வதறியாத நிலையில் இருந்த விவசாயிகளுக்குத் தற்போது பெய்து வரும் மழை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com