சுருக்குமடி வலை விவகாரத்தில் மோதல்: 10 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்
By DIN | Published On : 13th March 2020 07:41 AM | Last Updated : 13th March 2020 07:41 AM | அ+அ அ- |

மீனவா்களின் வேலை நிறுத்தம் காரணமாக, வேதாரண்யம் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பரப்பில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தது தொடா்பாக மீனவா்களுக்குள் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைக் கண்டித்து, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பில் மீன்வளத்தைப் பாதிக்கச் செய்யும் தடை விதிக்கப்பட்டுள்ள சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கு மீனவா்கள் மத்தியில் எதிா்ப்பு வலுத்து வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை கீச்சாங்குப்பம் மீனவா்களுக்கு வேதாரண்யம் பகுதி வெள்ளப்பள்ளம் மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தபோது, நடுக்கடலில் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இதைக் கண்டித்தும், சுருக்குமடி வலை பிரச்னைக்கு உரிய தீா்வு கிடைக்க வலியுறுத்தியும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல், வேதாரண்யம் பகுதிக்குள்பட்ட 10 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.