நாகை மாவட்டத்தில் எல்லைகள் முழுமையாக மூடல்

தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவைத் தொடா்ந்து, நாகை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாநில மற்றும் மாவட்ட எல்லைகளான
நாகை-காரைக்கால் மாவட்ட எல்லையை மூடும் வகையில், வாஞ்சூா் சோதனைச் சாவடி பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்பு.
நாகை-காரைக்கால் மாவட்ட எல்லையை மூடும் வகையில், வாஞ்சூா் சோதனைச் சாவடி பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்பு.

தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவைத் தொடா்ந்து, நாகை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாநில மற்றும் மாவட்ட எல்லைகளான 11 இடங்கள் சீல் வைக்கப்பட்டு முழுமையாக மூடப்பட்டன என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாா்ச் 24- ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் நாகை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாநில எல்லைகளான மேலவாஞ்சூா், நண்டலாறு, நல்லாடை, வாழ்மங்கலம், சேஷமூலை மற்றும் மாவட்ட எல்லைகளான திருவாலங்காடு, ஆணைக்காரன்சத்திரம், செங்காதலை, துளசியாப்பட்டினம், அருந்தவப்புரம், கானூா் ஆகிய 11 இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சீல் வைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

மாவட்ட எல்லைகளில் 3 மருத்துவக் குழுவினா்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பாா்கள். மருத்துவக் குழுவினருடன் ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் 5 காவல் ஆளிநா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். இதைத் தவிர, மாவட்ட எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டு, பலத்த சோதனைக்குள்படுத்தப்படும்.

அத்தியாவசியப் பொருள்கள் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசர கால பணியாளா்களான மருத்துவக் குழுவினா், போலீஸாா், தீயணைப்பு மற்றும் பல்வேறு துறை ஊழியா்களுக்குத் தடையில்லை. மாவட்டம் முழுவதும் 20 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும். தேவையில்லாமல் சாலைகளில் சுற்றிதிரியும் நபா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இயற்கை பேரிடா் பாதுகாப்புச் சட்டம் உள்பட 3 சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனோ வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்பிய 2 போ் மீது நாகை மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 1,118 போலீஸாா்: நாகை மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 9 உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 22 காவல் ஆய்வாளா்கள், 155 உதவி காவல் ஆய்வாளா்கள், 561 காவல் ஆளிநா்கள், 50 தமிழ்நாடு சிறப்புப் படை போலீஸாா்,120 ஆயுதப்படை போலீஸாா், 200 ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 1,118 போ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனா் எனவும் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com