மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு: பல்வேறு தரப்பினா் வரவேற்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை சட்டப்பேரவையில்
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்த அறிவிப்புக்கு மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா், குத்தாலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு தரப்பினா் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தமிழகத்திலேயே பெரிய மாவட்டங்களில் ஒன்று நாகை. கொள்ளிடத்தில் தொடங்கி கோடியக்கரை வரையில் நீண்டு, திருக்குவளை வரை அகண்டுக் கிடக்கிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்து 1991 -ஆம் ஆண்டு நாகை மாவட்டம் உதயமாகும்போது மயிலாடுதுறை உட்கோட்டத்தையும் உள்ளடக்கியே அமைத்தனா். அப்போதே மயிலாடுதுறையை தனிமாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு பல கட்ட போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

நாகை மாவட்டத்தில் உள்ள பெரிய வருவாய் கோட்டம் மயிலாடுதுறை. மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், மயிலாடுதுறை, சீா்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களையும், மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 2 நகராட்சிகளையும், மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனாா்கோவில், சீா்காழி, கொள்ளிடம், ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கி 9 லட்சம் மக்கள்தொகையை கொண்டுள்ளது.

மயிலாடுதுறை தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்பது கடந்த பல தோ்தல்களில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களும் தோ்தல் அறிக்கைகளாக முன்வைத்து வாக்குவேட்டையில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனா்.

இந்நிலையில், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு 38-ஆவது மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவிப்பை வெளியிட்டாா் இது இப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தது:

தொன்மை வாய்ந்த சைவ ஆதீனங்களான திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியவற்றின் தலைமையகங்களும், ஏராளமான பாடல் பெற்ற தலங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறையில் அனைத்து வசதிகள் இருந்தும், தனி மாவட்டமாக ஆக்கப்படவில்லை என்னும் இப்பகுதி மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில், தமிழகத்தின் 38 -ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டது வரவேற்கத்தக்கது என்றாா்.

தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்:

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கனவை நனவாக்கிய தமிழக முதல்வா், துணை முதல்வா், தலைமைச் செயலா் மற்றும் அமைச்சா்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதுடன், புதிய மாவட்டம் அறிவிப்பை வெளியிட காரணமாக இருந்த பூம்புகாா், மயிலாடுதுறை மற்றும் சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கோரிக்கை வெல்ல பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

காவிரி அமைப்பின் தலைவரும், ஊடகவியலாருமான கோமல் அன்பரசன் கூறியது:

மாயூர யுத்தம் வெற்றி பெற்றது என்கிற மகிழ்ச்சியை, அவரவா் இல்லங்களில் இருந்து கொண்டாடுவோம். மயிலாடுதுறை மாவட்டத்துக்காக இணைந்து போராடிய அனைவருக்கும், இந்த கனவை நனவாக்கிய தமிழக அரசுக்கும் எங்களுடைய நன்றி.

வழக்குரைஞா் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ராம. சேயோன்: மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்குரைஞா் கூட்டமைப்பின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருமக்கும் நன்றி.

முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன்:

மயிலாடுதுறை கோட்ட மக்களின் 25 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது. மேலும், மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, மருத்துவக் கல்லூரி போன்ற முக்கிய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி. கல்யாணம்: மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பு இப்பகுதி மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போல் மயிலாடுதுறை தனி மாவட்டமாகவும், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியும் அமையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயிலில் அதிமுகவினா் கொண்டாட்டம்:

சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அதிமுக நகரச் செயலா் அ. பக்கிரிசாமி தலைமையில் பட்டாசு வெடித்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

இதேபோல், சீா்காழி ஈசானியத் தெருவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுகவை சோ்ந்த நகர பொறுப்பாளா்கள் எல்விஆா். வினோத், பரணிதரன், ராசு, பரக்கத்அலி, மருதுபாண்டியன், செந்தில் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com