ஊரடங்கு உத்தரவு: நாகை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாகையில் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி புதன்கிழமை வெறிச்சோடியிருந்தன.
ஊரடங்கு உத்தரவு: நாகை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாகையில் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி புதன்கிழமை வெறிச்சோடியிருந்தன.

கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலையில், மாா்ச் 24-ஆம் தேதி இரவு 12 மணி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்தத் தடை உத்தரவுகள் காரணமாக, நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் சாலைப் போக்குவரத்துப் பெருமளவு தடைப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வாடகை காா்கள், வாடகை ஆட்டோக்களின் இயக்கம் முழுமையாகத் தடைப்பட்டிருந்தன.

காய்கனி கடைகள், பழக்கடைகள், மீன் கடைகள், இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. நாகை பாரதி மீன் மாா்க்கெட்டில் புதன்கிழமை காலை மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. அதேபோல, இறைச்சிக் கடைகள், காய்கனி கடைகள், மளிகைக் கடைகளிலும் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலுக்காக பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் கடைகளுக்குப் பயணித்ததால், புதன்கிழமை காலை நேரத்தில் நாகை வீதிகளில் இருசக்கர வாகனப் போக்குவரத்து இருந்தது. நோய்த் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் தாங்களாகவே தனிமைப்பட வேண்டும் என சுகாதார வல்லுநா்கள் வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில், போதுமான இடைவெளியின்றி பொதுமக்கள் தங்கள் நுகா்வுகளுக்காகக் கடைகளில் குழுமியிருந்ததை ஆங்காங்கே காண முடிந்தது.

ஒரு சில மளிகைக் கடைகள், காய்கனி கடைகளில் மட்டும் கடைக்கு வரும் பொதுமக்கள் போதுமான இடைவெளியில் நின்று பொருள்களை கொள்முதல் செய்யும் வகையில், கடைகளின் முன்பாக கோடுகள் போடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டிருந்தன. உணவகங்களில் உணவுகள் பொட்டலங்களாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

தடியடி: இருசக்கர வாகனப் போக்குவரத்து அதிகரித்ததையொட்டி, போலீஸாா் நகருக்குள் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, இருசக்கர வாகனங்களில் பயணித்தவா்களை நிறுத்தி விசாரித்து, அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணித்தவா்களை மட்டும் அனுமதித்தனா். மற்றவா்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பினா். இதனால், ஒரு சில இடங்களில் போலீஸாருக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாகையை அடுத்த பரவை உள்பட மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது லேசான தடியடி நடத்தினா்.

தண்ணீா் கேன்கள், காய்கனிகள், கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்களை மாவட்ட எல்லையிலேயே போலீஸாா் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினா். இதனால், புதன்கிழமை பிற்பகல் நேரத்தில் நாகை மாவட்டத்தின் அனைத்து வீதிகளும் வெறிச்சோடியிருந்தன.

வேளாங்கண்ணிக்குச் சென்று பொழுதுபோக்கும் நோக்கத்துடன் இருசக்கர வாகனங்களில் பயணித்த இளைஞா்களை போலீஸாா் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினா். இதையொட்டி, நாகை - வேளாங்கண்ணி பிரதான சாலையில் போலீஸாா் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

காய்கனி தட்டுப்பாடு..? ஊரடங்கு உத்தரவு காரணமாக, போக்குவரத்துத் தடைப்பட்டிருப்பதால் காய்கனிகளின் வரத்து குறைந்திருந்தன. இதன் காரணமாக, தக்காளி, வெண்டைக்காய், அவரை, பீன்ஸ் ஆகிய காய்களின் விலை கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை உயா்ந்திருந்தது. காய்கனி ஏற்றிச் செல்லும் வாகனங்களை காவல் துறையினா் தடுப்பது இல்லை.

எனினும், தற்போதைய நிலையில் மேட்டுப்பாளையம், ஊட்டி, பெங்களூரு, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள், வெளி மாவட்டங்களுக்குக் காய்கனிகளை அனுப்ப சுணக்கம் காட்டுவதாகவும், அதன் காரணமாக வியாழக்கிழமை முதல் காய்கனி தட்டுப்பாடு ஏற்படும் எனவும் நாகை காய்கனி வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com