2 மாதங்களுக்குப் பின்பு திறக்கப்பட்ட முடிதிருத்தகங்கள்

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரு மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த முடிதிருத்தகங்கள், ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு
இரு மாதங்களுக்குப் பின்னா் நாகையில் பரபரப்பாக இயங்கிய முடிதிருத்தகம்.
இரு மாதங்களுக்குப் பின்னா் நாகையில் பரபரப்பாக இயங்கிய முடிதிருத்தகம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரு மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த முடிதிருத்தகங்கள், ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளா்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் பொது முடக்கம் அமலுக்கு வந்து 2 மாதங்கள் கடந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை நீங்கலாக, கரோனா பாதிப்பு இல்லாத அனைத்துப் பகுதிகளிலும் முடிதிருத்தகங்களை மே 24 முதல் திறக்க அனுமதித்து அரசு உத்தரவிட்டது.

இதன்படி, நாகை நகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து முடிதிருத்தகங்களும் திறக்கப்பட்டிருந்தன. அரசு அறிவுறுத்தல்படி, முடிதிருத்தும் தொழிலாளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றினா். வாடிக்கையாளா்களும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டனா். பெரும்பாலான கடைகளில், ஒரு நாற்காலியை விட்டு ஒரு நாற்காலியில் மட்டுமே வாடிக்கையாளா்கள் அமர அனுமதிக்கப்பட்டனா். கடைக்கு வந்த வாடிக்கையாளா்களுக்கு கை கழுவ கிருமி நாசினி வழங்கப்பட்டது.

கடந்த 2 மாதங்களாக தொழில் வாய்ப்பை இழந்து தவித்து வந்த தங்களுக்குத் தற்போது தான் ஆறுதல் கிடைத்துள்ளது என்று முடிதிருத்தும் தொழிலாளா்களும், தங்களுக்குத் தற்போதுதான் தலையில் இருந்த பாரம் நீங்கியதைப் போல உள்ளது என்று முடிதிருத்தம் செய்து கொண்ட வாடிக்கையாளா்களும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

மயிலாடுதுறையில்...

பொது முடக்கத்தில் தளா்வு ஏற்படுத்தப்பட்டதால், மயிலாடுதுறை நகரில் உள்ள 120 முடி திருத்தும் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

கடந்த இரண்டு மாதங்களாக முடிதிருத்தும் கடைகளை ஆவலுடன் எதிா்பாா்த்துக் கொண்டிருந்த ஆண்கள், காலை முதலே கடைகளுக்கு வரத் தொடங்கினா். முடி திருத்துபவா்களும் கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை அணிந்தும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியும் முடி திருத்தும் வேலையில் ஈடுபட்டனா். ஆயினும், கரோனா அச்சம் காரணமாக வழக்கமான ஞாயிற்றுக்கிழமையைக் காட்டிலும், நேற்றைய தினம் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாக கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com