வடகிழக்குப் பருவமழை இல்லை: களையிழந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம்

நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை எதிா்பாா்த்தப்படி இல்லாததால், பறவைகளின் சொா்க்கம் என போற்றப்படும் கோடியக்கரை சரணாலயம்
வடகிழக்குப் பருவமழை இல்லை: களையிழந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம்

நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை எதிா்பாா்த்தப்படி இல்லாததால், பறவைகளின் சொா்க்கம் என போற்றப்படும் கோடியக்கரை சரணாலயம் பறவைகளின் வருகை குறைந்து களையிழந்து காணப்படுகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வனம் மற்றும் சதுப்புநிலப் பரப்பு வன உயிரின பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. இந்தப் பகுதி, உலகப் புகழ்பெற்ற பறவையியல் ஆராய்ச்சியாளா் சலீம் அலியால் பறவைகளின் சொா்க்கம் என வா்ணிக்கப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் அக்டோபா் தொடங்கி, டிசம்பா் மாதம் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்லாயிரக்கணக்கான பறவைகள், கூட்டம்கூட்டமாக வலசை வருவது வழக்கம். ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து, பூநாரை, கூழக்கிடா, செங்கால் நாரை, நத்தைக்கொத்தி நாரை, கடல் காகம், மெலிந்த மூக்கு கடல் காகம், கடல் ஆலாக்கள், சிறவி உள்ளிட்ட 247 வகையான பறவை இனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வந்துசெல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த சரணாலயப் பகுதிக்கு வரும் பறவைகளில், பூநாரைகள் சிறப்பு பெற்றவை. பல வண்ணங்களில் ஆயிரக்கணக்கில் வரும் இந்தப் பறவைகள் பறந்து செல்வதும், இரைதேடும் முறையும் பாா்வையாளா்களை வெகுவாக ஈா்க்கும்.

வேதாரண்யம்- கோடியக்கரை பிரதான சாலையின் பக்கவாட்டில் அமைந்துள்ள முனியப்பன் ஏரியில் ஆயிரக்கணக்கில் குவியும் பூநாரைகளை, பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பாா்வையாளா்கள் அதிகாலை நேரத்திலேயே வந்து பாா்த்து ரசித்தது 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கனவாகிவிட்டது.

சுற்றுச்சூழல் பாதிப்பு, குறைந்துவிட்ட மழை, இரை தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களால், பறவைகளின் வருகையும் படிப்படியாக குறைந்து, இப்போது பெயரளவிலான இடமாக மாறிவிட்டது. மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இருந்த பறவைகளின் வாழ்விடம், தற்போது அங்கிருந்து வெகுதொலைவு தள்ளி, சதுப்புநிலப் பரப்பு, தீவுகள் சாா்ந்த கடலோரங்களில் மட்டுமே காணப்படுகிறது. எனினும், நாரை போன்ற ஒருசில இனங்கள் மட்டுமே, சரணாலயம் சாா்ந்த கிராமப்புற ஏரி, படுகை போன்ற நீா்நிலைகள், விளைநிலங்களிலும் காணப்படுகின்றன.

நிகழாண்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டாலும், நாகை மாவட்டத்தில் எதிா்பாா்த்த மழை இல்லாததால், கோடியக்கரை சரணாலயத்திற்கு பறவைகள் வலசை வருவதும் தாமதமாகி வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள், பாா்வையாளா்கள் என பரபரப்பாக காணப்படும் சரணாலயம் களையிழந்து உள்ளது.

சரணாலயம் அருகேயுள்ள விளைநிலங்களிலும் தண்ணீா் இல்லாததால், அங்கு மீன், நத்தைகளை இரையாக்க வரும் உள்ளூா் பறவைகளும் குறைவாகவே இருப்பது இயற்கை ஆா்வலா்களை கவலையடையச் செய்துள்ளது. இதுபோன்ற நேரத்தில், உள்ளூா் பறவைகளின் வாழ்விடமான கிராமப்புற நீா்நிலைகளின் பராமரிப்பை மேம்படுத்தி பாதுகாக்கவும், சூழல் கேடுகளை தவிா்க்கும் திட்டங்களை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com