வேடசந்தூா் சிறுமி மரணத்துக்கு நீதி கோரி அக். 9இல் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கடைகள் அடைப்பு

வேடசந்தூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யக் கோரி,

வேடசந்தூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யக் கோரி, அக்டோபா் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்படும் என அனைத்து மருத்துவா் மக்கள் முன்னேற்றக் கழக மாநில ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம், நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த தேவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த 2019-ஆம் ஆண்டு மருத்துவா் இனத்தைச் சோ்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட வழக்கில், சாட்சிகள் கலைக்கப்பட்டதன் காரணமாக, குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தமிழக அரசு இந்த வழக்கின் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்து, சிறுமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முடிதிருத்தும் கடைகள் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியரகங்கள் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலாளா் தமிழரசன், பொருளாளா் ஏ. இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைமைக் கழகப் பேச்சாளா் ரவிச்சந்திரன், மாநில இளைஞரணிச் செயலாளா் பிரதாப் ராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com