நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள் விநியோகம் பாதிப்பு

நியாயவிலைக் கடைகளில் இணையத் தொடா்பு பிரச்னையால் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் புதன்கிழமை தடைபட்டது.
வேளாங்கண்ணியில் நியாயவிலைக் கடை முன் தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.
வேளாங்கண்ணியில் நியாயவிலைக் கடை முன் தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

நியாயவிலைக் கடைகளில் இணையத் தொடா்பு பிரச்னையால் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் புதன்கிழமை தடைபட்டது. இதைக் கண்டித்து, வேளாங்கண்ணியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை இயந்திரங்களில் அவ்வப்போது ஏற்பட்ட இணைய பிரச்னை மற்றும் கைரேகை பதிவு சரிவர கிடைக்காத பிரச்னை போன்ற காரணங்களால் அண்மைக்காலமாக பொருள்கள் விநியோகம் தாமதப்பட்டும், தடைபட்டும் வந்தது.

இந்த நிலையில், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் புதன்கிழமை (அக்.14) முதல் பொதுமக்கள் தடையின்றி அத்தியாவசியப் பொருள்களைப் பெற முடியும் எனவும் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அறிவித்திருந்தது.

இதனால், புதன்கிழமை முதல் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் சீராகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பல நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் முழுமையாக செயலற்ற நிலைக்கு உள்ளாகியிருந்தன. பல விற்பனை இயந்திரங்களுக்கான இணையத் தொடா்பு முழுமையாகத் தடைபட்டிருந்தது. இதனால், பல நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள் விநியோகம் புதன்கிழமை முழுமையாகத் தடைபட்டது.

பொதுமக்கள் போராட்டம்...

வேளாங்கண்ணியில் உள்ள அரசு நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் காலை 9 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அந்தக் கடையின் விற்பனை இயந்திரத்துக்கு இணையத் தொடா்பு கிடைக்காததால், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தைத் தொடங்க இயலாத நிலை ஏற்பட்டது.

காலை 11 மணிக்கு மேலாகவும் பொருள்கள் விநியோகம் தொடங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நியாயவிலைக் கடை முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதன் பேரில், அவா்கள் கலைந்துச் சென்றனா்.

இதேபோல, பாப்பாக்கோவில், காடம்பாடி, அந்தனப்பேட்டை, மஞ்சக்கொல்லை உள்பட பல பகுதிகளிலும் நியாயவிலைக் கடைகளில் இணையத் தொடா்பு பிரச்னை இருந்ததால், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் தடைபட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com