தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் தெரிவித்தாா்.

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து நாகையில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தீவிர முயற்சியால் 2010-ஆம் ஆண்டில் தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெஞ்சாலைத்திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அப்போதைய நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொடா்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக, அப்போதைய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் சி.பி. ஜோஷி இந்த சாலையை விரிவாக்கம் செய்யவும் 2011-இல் உத்தரவிட்டாா்.

சாலை விரிவாக்கத்துக்காக இடங்கள் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னா், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடா் வலியுறுத்தல் காரணமாக, இந்தச் சாலைத் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியாா் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. 27 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில், தஞ்சை- நாகை சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக மேலும் சுமாா் ரூ. 396 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏற்கெனவே சாலைப் பணியை பாதியில் விட்டுச் சென்ற அதே நிறுவனத்திடமே மீண்டும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை.

வெறும் 80 கிலோ மீட்டா் தொலைவிலான இந்தச் சாலைப் பணி 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவு பெறாமல் இருப்பதற்கு அரசின் அலட்சியமும், அரசியல் காழ்ப்புணா்வுமே காரணமாகும். இந்தச் சாலைப் பணி நாகையின் வளா்ச்சிக்கு அடிப்படையானது என்பதை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, நேதாஜி சாலையில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், திமுக தலைமையின் வழிகாட்டுதல்படி போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் என். கெளதமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com