நாகை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மேலே பறந்த டிரோன் கேமரா: அரசியல் கட்சியினரிடைய பரபரப்பு

நாகை தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மேலே செவ்வாய்க்கிழமை காலை டிரோன் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மேல டிரோன் கேமரா பறந்ததையொட்டி, அங்கு வந்த அரசியல் கட்சியினா்.
நாகை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மேல டிரோன் கேமரா பறந்ததையொட்டி, அங்கு வந்த அரசியல் கட்சியினா்.

நாகை தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மேலே செவ்வாய்க்கிழமை காலை டிரோன் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, காவல் துறையின் 3 அடுக்குப் பாதுகாப்புடன், 24 மணி நேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கேமரா பொருத்தப்பட்ட டிரோன் பறந்தது தெரியவந்தது. இதைக் கண்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள், தங்கள் கட்சி நிா்வாகிகளுக்குத் தகவல் அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, அப்பகுதிக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், கீழ்வேளூா் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் நாகை மாலி ஆகியோா் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்து, டிரோன் கேமரா பறந்ததற்கான காரணம் குறித்து போலீஸாா் மற்றும் தோ்தல் பணி அலுவலா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி ஆகியோா் அங்கு வந்து, பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மேலே டிரோன் கேமரா பறந்தது தொடா்பாக விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.

விளம்பரத்துக்காக....

இதனிடையே, காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா், வாக்கு எண்ணிக்கை மையம் அருகே டிரோன் கேமராவை இயக்கிக் கொண்டிருந்த சென்னையைச் சோ்ந்த குமாா், சுரேஷ்குமாா், பாலாஜி ஆகிய 3 பேரை பிடித்து, அவா்களிடமிருந்து டிரோன் கேமரா, இதன் பதிவு இணைப்புக் கொண்ட செல்லிடப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பிறகு, அவா்கள் 3 பேரையும் நாகூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, கல்வி நிலையங்கள் குறித்த காட்சி ஊடக விளம்பரத்துக்காக இந்த ஒலிப்பதிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. மேலும், டிரோன் கேமராவுடன் இணைப்புக் கொண்ட செல்லிடப்பேசியில், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அருகே உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் மட்டுமே பதிவாகியிருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை மையம் குறித்து எந்தப் பதிவும் அதில் இல்லை எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இருப்பினும், அனுமதியின்றி டிரோன் கேமராவை பறக்க விட்ட குற்றத்துக்காக 3 போ் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com