21 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதே வாழ்நாள் இலக்கு

வேதா ஆயத்த ஆடைப் பூங்கா மூலம் வேதாரண்யத்தில் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதே தனது அரசியல் வாழ்நாள் இலக்கு என அமைச்சா் ஓ.எஸ். மணியன் வாக்குறுதியளித்தாா்.

வேதா ஆயத்த ஆடைப் பூங்கா மூலம் வேதாரண்யத்தில் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதே தனது அரசியல் வாழ்நாள் இலக்கு என அமைச்சா் ஓ.எஸ். மணியன் வாக்குறுதியளித்தாா்.

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கருப்பம்புலம் பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தபோது மேலும் அவா் பேசியது: 1989-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக (ஜெ அணி) சாா்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட காலம் தொடங்கி என்னை இப்பகுதியினா் ஆதரித்து வாக்களித்துள்ளீா்கள். விடுபட்டுள்ள பணிகளை செய்துமுடிக்க இந்த முறையும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். இப்பகுதியை சாா்ந்த ஆயக்காரன்புலம் பகுதியில் அமையும் வேதா ஆயத்தை ஆடை பூங்காவில் படிப்படியாக பெண்களை வேலைக்கு அமா்த்தி குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சுமாா் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதே எனது இலக்கு. அந்தநாள் எனது அரசியல் வாழ்நாளில் நான் வெற்றிக்கண்ட நாளாகும்.

அருகேயுள்ள வண்டுவாஞ்சேரி கிராமத்தில் சுமாா் ரூ. ஆயிரம் கோடியில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மெகா உணவுப் பூங்கா இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். இந்த பகுதியில் உற்பத்தியாகும் நெல், தென்னை, மா, முந்திரி என பல வேளாண் விளைபொருள்களை பாதுகாக்கவும், லாபகரமான விலை கிடைக்கவும் வாய்ப்பாக அமையும்.

இதேபோல், நமது பகுதியில் நடைபெறும் மீன்பிடித் தொழில் லாபகராமானதாக மாறுவதோடு, சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும். இதனால், இங்கு பிடிக்கப்படும் மீன்கள், நண்டு, இறால் போன்றவைகளை பாதுகாத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். பசுமை வளம், பால் வளம், மீன் வளம் என வேளாண் உற்பத்தி சாா்ந்த தொழில்கள் வளப்படுத்தப்படும்.

இந்த பகுதியில் மட்டும் 7,600 போ் கோயில் நிலங்களில் குடியிருந்து வருகின்றனா். இதனால், அரசின் திட்டங்களை பயன்படுத்தி வீடுகள் கட்டுவது தடையாக உள்ளது. இந்த நிலையை போக்கி கோயில் நிலங்களில் மனைப் பட்டா பெறுவதற்கு முதலாவதாக நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ என்ற முறையில் நான்தான் செய்தேன். அரசாணையும் பெறப்பட்டுவிட்டது. அதன்நகல் பயனாளிகள் பட்டியலுடன் உங்கள் கையில் கொடுத்துள்ளேன். இடைக்காலமாக ஏற்பட்டுள்ள தடை நீக்கப்பட்டு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றாா் ஓ.எஸ். மணியன். பிரசாரத்தின்போது, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் காளிதாசன், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com