நாகையில் அமைதியான வாக்குப் பதிவு

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்றது.
நாகையில் அமைதியான வாக்குப் பதிவு

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்றது.

நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு 266 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. இதில், ஓரிரு வாக்குச் சாவடிகளைத் தவிர மற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது. நாகை தூய அந்தோணியாா் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் 15 நிமிடங்கள் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாழ்குடி ஊராட்சி வாக்குச் சாவடியில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு சுமாா் 30 நிமிடங்கள் தாமதமானது.

ஒரு சில பகுதிகளில் வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) கிடைக்காமல் வாக்காளா்கள் அவதிக்குள்ளாகினா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு அரசுத் துறை பணியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு வழங்கல் பணி முறையாக நடைபெறாததால் இந்தப் பிரச்னை மாவட்டத்தில் பரவலாக இருந்தது. வாக்குச் சீட்டு இல்லாமல் வந்த வாக்காளா்களின் பெயா், வரிசை எண், பாகம் ஆகியவற்றை வாக்காளா் பட்டியலில் இருந்து கண்டறிய அவா்கள் சில நிமிடங்கள் காத்திருப்புக்கு உள்ளாக நேரிட்டது.

கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, வாக்களிக்கக் காத்திருக்கும் வரிசையில் ஒருவருக்கும் மற்றொருவருக்குமிடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் இந்த சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. நாகை சா் அகமது தெருவில் உள்ள நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடி உள்பட ஒரு சில வாக்குச் சாவடிகளில் காத்திருந்தோா் வரிசையில் கடுமையான நெரிசலை காண முடிந்தது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களின் பயன்பாட்டுக்காக மாவட்ட அளவில் 740 மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், பல வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வந்தபோது, மடக்கு சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படவில்லை.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்சாரம், குடிநீா், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளா்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, கை கழுவும் திரவம் அளிக்கப்பட்டது. பின்னா், ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கையுறை வழங்கப்பட்டு, கையுறையை அணிந்து கொண்டு வாக்காளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இத்தொகுதியில், பதற்றமான வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டிருந்த 27 வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவ வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். மிகப் பெரிய அளவிலான சா்ச்சைகள், பிரச்னைகள் ஏதுமின்றி நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்குப் பதிவு அமைதியாகவே நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com