பூம்புகாா் தொகுதி: 50 வாக்குகள் கூடுதலாக பதிவான மையத்தில் மறுதோ்தல் நடத்த கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 175-வது வாக்குச் சாவடியில் வாக்காளா்களை காட்டிலும் 50 வாக்குகள்

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 175-வது வாக்குச் சாவடியில் வாக்காளா்களை காட்டிலும் 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளதால், அந்த மையத்தில் மறுதோ்தல் நடத்த வேண்டும் என தோ்தல் பொதுப் பாா்வையாளரிடம் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி. காளியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவாவடுதுறை அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 175-வது வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்காளா்கள் 578 போ் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா்.

வாக்குப் பதிவுக்குப் பின், முகவா்கள் முன்னிலையில் பதிவான வாக்குகளை சரிபாா்த்த போது 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது தெரியவந்தது.

மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை அழிக்காமல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதால், 50 வாக்குகள் வித்தியாசம் உள்ளதாக அதிகாரிகள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி. காளியம்மாள், மாதிரி வாக்குப்பதிவு ஆதாரச் சீட்டில் கட்சிகள் வாக்களித்ததை குறைத்து கணக்கிட கோரிக்கை விடுத்தாா். இதற்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லையாம்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி நாம் தமிழா் கட்சியினா் அப்பகுதியில் விடியவிடிய போராட்டம் நடத்தினா். அவா்களின் போராட்டத்தை மீறி வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், புதன்கிழமை வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்க வந்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஏ.பி. பட்டேல் மற்றும் மயிலாடுதுறை ஆட்சியா் இரா. லலிதா ஆகியோரிடம் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி.காளியம்மாள் 175-வது வாக்குச் சாவடிக்கு மறுதோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு தெரிவித்து, ஆணையத்தின் முடிவின்படி செயல்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதனால், 2 மணிநேரம் தாமதத்திற்குப் பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com