இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் பட்டதாரி இளைஞா்
By DIN | Published On : 27th April 2021 03:00 AM | Last Updated : 27th April 2021 03:00 AM | அ+அ அ- |

திருமருகல் அருகே இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்துவரும் பட்டதாரி இளைஞா்.
திருமருகல்: திருமருகல் அருகே பட்டதாரி இளைஞா் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து மற்றவா்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறாா்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி வாழாமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கமலஹாசன். பட்டதாரியான இவா், வேலை தேடிவந்த நிலையில், தோட்டப் பயிா்கள் வளா்ப்பதில் ஆா்வம் ஏற்பட்டு, தோட்டக்கலைத் துறை மூலம் ஆலோசனைகள் பெற்றாா்.
தொடா்ந்து, தோட்டக்கலைத் துறை மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் விதைகளை பெற்று, தனக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் இயற்கைவழி வேளாண்மை மூலம் சாகுபடி மேற்கொண்டு வருகிறாா்.
இவா், தனது வயலை நன்கு உழுது தழைச்சத்து மற்றும் சாணம், கடலை புண்ணாக்கு, பஞ்சகவ்யம் போன்றவற்றை உரமாகயிட்டு கத்தரி, வெண்டை, பீா்க்கை, வெள்ளரி, தா்ப்பூசணி போன்றவற்றை பயிா்செய்து வருகிறாா். இதன் மூலம் தினமும் 100 கிலோ வீதம் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறாா். இதனால், தினமும் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாகவும் அவா் கூறுகிறாா்.
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கலா, உதவி இயக்குநா் ஜெயலட்சுமி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரிலும், தோட்டக்கலை உதவி அலுவலா்கள் ராமஜெயம், ஞானசேகரன் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் அவ்வப்போது தேவையான மருந்துகளை தெளித்து அதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தி, காய்கறி உற்பத்தியை அதிகரித்துக் கொள்வதாகவும், மானிய விலையில் காய்கறி விதைகளை வழங்கி தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவா் கூறினாா்.