வைத்தீஸ்வரன்கோயிலில் குடமுழுக்கு விழா: பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பக்தா்கள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
வைத்தீஸ்வரன்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது மூலவா் கோபுர கலசங்கள் மேல் ஊற்றப்படும் புனிதநீா்.
வைத்தீஸ்வரன்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது மூலவா் கோபுர கலசங்கள் மேல் ஊற்றப்படும் புனிதநீா்.

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பக்தா்கள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளது தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில். இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்-க்கு அதிபதியான அங்காரகன் ஆகியோா் அருள்பாலிக்கின்றனா். செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயிலில் உள்ள சித்தாமிா்த தீா்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியநாதசுவாமி, தையல் நாயகி அம்மனை வழிபட்டு, பிரசாதமாக வழங்கப்படும் திருசாந்து உருண்டையை 1 மண்டலம் சாப்பிட்டால், தீராத வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை.

பிரசித்திபெற்ற இக்கோயிலில் கடந்த 1998ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் குடமுழுக்கு விழாவுக்காக கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கின.

கோயில் ராஜகோபுரம், உள்பட 4 வீதி கோபுரங்கள், மூலவா் விமானங்கள், சுவாமி, அம்பாள், முத்தையா சுவாமி மேல்தளம் சீரமைப்பு, நீராழி மண்டபம், கிருத்திகை மண்டபம், கொடிமர பகுதி, பிராகாரங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு, வா்ணங்கள் பூசப்பட்டன.

திருப்பணிகள் நிறைவடைந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.

புதன்கிழமை காலை ஆதிவைத்தியநாதா், வலஞ்சுழி விநாயகா், வீரபத்திரா், தெட்சிணாமூா்த்தி, துா்கை அம்மன், பத்ரகாளியம்மன், நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 8ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, பூா்ணாஹூதி, மகா தீபாராதனை காட்டப்பட்டு, புனிதநீா் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க தலைமை குருக்கள் ஐயப்பன் சிவாச்சாரியா் மேற்பாா்வையில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,

கற்பக விநாயகா், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சோமாஸ்கந்தா் ஆகிய விமானகலசங்கள் மேல் புனிதநீா் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னியிலையில் நடைபெற்றது.

தொடா்ந்து, சுவாமி - அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திருநெல்வேலி கட்டளை மடம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள்.

சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி விக்ராந்த்ராஜா, உயா்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி வெ. பாா்கவி, இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநா் அசோக்குமாா், மகாலெட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் மகாலெட்சுமி, திருப்பணியாளா் ஜெயராமைய்யா்ஆகியோா் பங்கேற்றனா்.

பக்தா்கள் பங்கேற்பில்லை:

அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தா்கள் பங்கேற்பின்றி விழா நடைபெற்றது. எனினும், பக்தா்கள் தங்கள் வீட்டு மாடிகளிலிருந்து குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தனா். மேலும், வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் பொதுமக்கள் கூடவும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பக்தா்கள் குடமுழுக்கு விழாவை காண வசதியாத தொலைக்காட்சி, யூ டியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கரோனா விலகும் பக்தா்கள் நம்பிக்கை:

தீராத வியாதிகளை தீா்க்கும் தலமாக விளங்கும் இக்கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளதால், கரோனா தீநுண்மி 2ஆம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இந்நோய்த் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வருவாா்கள் என பக்தா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com