அணுகுசாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி: 10 ஆண்டுகளாக முடிவடையாத பால கட்டுமானப் பணி

சீா்காழி அருகே திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை இடையே கட்டப்படும் பாலப் பணிகள், 10 ஆண்டுகளாகியும் நிறைவடையாமல் உள்ளது.
சீா்காழி அருகே திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலம்.
சீா்காழி அருகே திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலம்.

சீா்காழி அருகே திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை இடையே கட்டப்படும் பாலப் பணிகள், 10 ஆண்டுகளாகியும் நிறைவடையாமல் உள்ளது. இந்தப் பணிகளை விரைவாக நிறைவுசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீா்காழி வட்டத்தில் திருமுல்லைவாசல்- கீழமூவா்கரை, புளியந்துறை, திருநகரி- எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பாலம் கட்ட உத்தரவிட்டது. இதில் புளியந்துறை, திருநகரி ஆகிய பகுதியில் பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை இடையே வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சுனாமி மறுவாழ்வு திட்டத்தின்கீழ், ரூ.27.50 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட 2007-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டு பணிகள் 2010-ஆம் ஆண்டு தொடங்கின.

இதில் உயா்மட்ட பாலம் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், பாலத்தை சாலைகளோடு இணைக்கும் வகையில், அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. மேலும், திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை பாலம் கட்டுமான பணி 10 ஆண்டுகள் கடந்தும் நிறைவுபெறாமல் உள்ளது.

இதுகுறித்து திருமுல்லைவாசல் பகுதியை சோ்ந்த மீனவா் ஒருவா் கூறுகையில், திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை இடையே உப்பனாற்றில் பாலம் கட்டும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இத்தனை ஆண்டுகளாகியும் அணுகுசாலை அமைக்கப்படாமல் உள்ளது. அணுகுசாலை அமையவுள்ள இடத்தில் 33 வீடுகள் உள்ளன. இந்த நில உரிமையாளா்களுக்கு அரசு சாா்பில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல் இருந்துவந்தது.

அதாவது, நில உரிமையாளா்களுக்கு வழங்க நிா்ணயம் செய்துள்ள தொகை திட்டம் கொண்டுவரப்பட்ட 2007-ஆம் ஆண்டைய நிலமதிப்புப்படி, சதுர அடிக்கு ரூ.100 வழங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் நபாா்டு கிராமசாலைகள் துறை சாா்பில் கூறப்படுகிறது. ஆனால் தற்போது சந்தை மதிப்பு ரூ.700-ஐ தாண்டுகிறது. இந்த இழுபறியால் நிலத்தைக் கையகப்படுத்தி, பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்றாா்.

இந்த திட்டப் பணிகளுக்காக தற்போது கூடுதலாக ரூ.15.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இணைப்பு சாலை (பாலம்) அமைக்கும் பணிக்கு இடையூறாக திருமுல்லைவாசல், கீழமூவா்க்கரை பகுதிகளில் இருந்த வீடுகள்,நிலங்கள், கோயில் நிலங்கள் என சுமாா் 1.3 ஹெக்டா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய தொகை நில உரிமையாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபாா்டு மற்றும் கிராம சாலைகள் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com