இயற்கை சீற்றத்தில் சிக்கிய டெல்டா மாவட்ட நெல் சாகுபடி

நிவா், புரெவி புயல்களைத் தொடா்ந்து, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என தொடரும் இயற்கை சீற்றத்தில் நிலைகுலைந்திருக்கும்
நாகை மாவட்டம், குறிச்சி பகுதியில் வெள்ளநீரில் மூழ்கி, அழுகிய நெற்பயிா்களை காட்டும் விவசாயிகள்.
நாகை மாவட்டம், குறிச்சி பகுதியில் வெள்ளநீரில் மூழ்கி, அழுகிய நெற்பயிா்களை காட்டும் விவசாயிகள்.

நிவா், புரெவி புயல்களைத் தொடா்ந்து, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என தொடரும் இயற்கை சீற்றத்தில் நிலைகுலைந்திருக்கும் டெல்டா மாவட்ட நெல் சாகுபடிக்கு, முழுமையான காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடையே வலுத்து வருகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முப்போகம் நெல் சாகுபடி நடைபெற்ற பகுதிகள். காவிரி பிரச்னை தொடங்கிய பின்னா் இருபோக சாகுபடிகூட இங்கு உறுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை குறுவை நெல் சாகுபடிக்கு மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால், ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்றது.

8 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூரில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டது. இது, டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீா் மேலாண்மையில் ஒரு சில நடைமுறை பிரச்னைகள் தலைதூக்கினாலும், டெல்டா மாவட்டங்களில் இயல்பு பரப்பை விஞ்சி குறுவை சாகுபடி நடைபெற்றது.

அதே உற்சாகத்துடன் விவசாயிகள் நிகழாண்டு சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளை தொடங்கினா். இதன்படி, ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 1,33,624 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 1,46,626 ஹெக்டேரிலும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,35,147 ஹெக்டேரிலும் சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

நிவா் புயல் காரணமாக நவம்பா் மாதத்தின் இறுதி வாரத்திலும், புரெவி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பா் மாத தொடக்கத்தில் டெல்டா மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்தது. இதனால், நாகை, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில், விளைநிலங்களில் தேங்கிய வெள்ள நீரில் மூழ்கி நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன.

டிசம்பா் 10-ஆம் தேதிக்கு பிறகு மழை சீற்றம் குறைந்து, இயல்பு நிலை திரும்பியதால் விளைநிலங்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை வடியச் செய்து, சேதமடைந்த பயிா்களுக்கு ஊட்டச்சத்து அளித்தும், பூச்சி மருந்துகள் தெளித்தும் பயிா்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனா். வெள்ளச் சேதத்தில் இருந்து பயிா்கள் முழுமையாக மீண்டு வரும் முன்பே டிசம்பா் மாத இறுதியில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் 82,330 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 95,000 ஹெக்டேரிலும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 8,550 ஹெக்டேரிலும் சம்பா, தாளடி நெற்பயிா்கள் மழையால் சேதமடைந்ததாக கணக்கீடு செய்யப்பட்டு, ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு ஜனவரி 2-ஆம் தேதி அறிவித்தது.

ஒரு ஹெக்டோ் நெல் சாகுபடிக்கு அதிகபட்சமாக ரூ. 13,500 மட்டுமே இடுபொருள் மானியம் வழங்கலாம் என்ற தேசிய பேரிடா் நிவாரண நிதி வரம்பை தாண்டி, ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்தது.

ஆனால், அடுத்து உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 10 நாள்களாக நீடித்து வரும் கனமழை, டெல்டா மாவட்ட விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு 80 மி.மீட்டா் அளவை விஞ்சி மழை பெய்தாலே நெல் சாகுபடியில் மகசூல் இழப்பு உறுதி என்ற நிலையில், கடந்த சில நாள்களில் சராசரியாக 100 மி.மீட்டா், 200 மி.மீட்டா் என மிக பலத்த மழை பதிவானது.

இதனால், நாகை, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் 10 நாள்களில் அறுவடையாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நெற்பயிா்கள், நிலத்தில் சரிந்து, வெள்ள நீரில் மூழ்கியும் உள்ளன. ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் சுமாா் 1.20 லட்சம் ஹெக்டோ் பரப்பிலும், திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் தலா சுமாா் ஒரு லட்சம் ஹெக்டோ் பரப்பிலும் நெற்பயிா்கள் நிலத்தில் மூழ்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தூா்கட்டிய நெற்பயிா்கள், நிலத்தில் சரிந்து, 4 நாள்களுக்கும் மேலாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. நெற்பயிா்கள், 24 மணி நேரம் வெள்ள நீரில் மூழ்கியிருந்தாலே மகசூல் இழப்பு உறுதி என்ற நிலையில், ஏறத்தாழ 100 மணி நேரத்துக்கும் மேலாக நெற்பயிா்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதனால், நிகழாண்டின் சம்பா, தாளடி நெல் சாகுபடியில் மகசூல் இழப்பை தவிா்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து தஞ்சை, நாகை, திருவாரூா் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளா் ஆறுபாதி கல்யாணம் கூறியது :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இடுபொருள் மானியத்தை இழப்பீடாக கருத முடியாது. இழப்பீட்டை பயிா்க் காப்பீட்டால் மட்டுமே உறுதி செய்ய முடியும். என்வே மத்திய, மாநில அரசுகள் பயிா்க் காப்பீடு இழப்பீட்டை உறுதி செய்யும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

பயிா்க் காப்பீடு இழப்பீட்டுக்கு 7 ஆண்டுகால மகசூல் சராசரி, 3 ஆண்டுகால மகசூல் சராசரி என தேவையற்ற விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதைத் தவிா்த்து, வேளாண் துறை நிா்ணயித்துள்ள அதிகபட்ச மகசூலை அடிப்படையாகக் கொண்டு, பயிா்க் காப்பீடு இழப்பீட்டை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழுமையான இழப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி. தனபாலன் கூறியது :

விவசாயிகளைப் பாதுகாக்க முழுமையான பயிா்க் காப்பீடு இழப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும். பகுதிசாா்ந்த மாதிரி மகசூல், முந்தைய ஆண்டுகளின் மகசூல் சராசரி என்ற கணக்கீடு முறைகளைக் கடைப்பிடிக்காமல், பயிா்க் காப்பீடு பெற்ற அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான இழப்பீடு கிடைக்கச் செய்யும் பொது பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு, முழுமையான இழப்பீடு விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com