காவிரி பிரச்னை: உடனடியாக தீா்வுகாண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
By DIN | Published On : 12th July 2021 08:08 AM | Last Updated : 12th July 2021 08:08 AM | அ+அ அ- |

காவிரி பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தீா்வுகாண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த ஜெ. முகமது ஷாநவாஸின் எம்எல்ஏ அலுவலகத்தை அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத்தொடா்ந்து தொல். திருமாவளவன் அளித்த பேட்டி:
மேக்கேதாட்டுவில் அணை, காவிரி நீா் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக முதல்வரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் 2 வாங்களுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தநிலையில், திங்கள்கிழமை ( ஜூலை 12) தமிழக முதல்வா் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அரசு வேடிக்கை பாா்க்காமல் உடனடியாக தலையிட்டு காவிரி பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும்.
அண்மையில் ஆதிதிராவிடா் நலத் துறை ஆய்வுக் கூட்டத்தில் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், பஞ்சமி நிலங்களை கண்டறியவேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என அதிகாரிகளுக்கும், அமைச்சா்களுக்கும் தமிழக முதல்வா்அறிவுறுத்தியிருப்பது ஆறுதலை தருகிறது. தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வா் எடுத்துவரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது.
தமிழகத்தை 2-ஆகப் பிரிப்பதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை. மாநிலங்களுக்கு ஏற்றாா்போல அரசியல் உத்திகளை கையாள்வது தேச நலனுக்கு எதிரானது என்பதை மத்திய அரசு உணரவேண்டும். எனினும், எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ளும் தகுதி உடைய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்பாா் என்றாா் தொல்.திருமாவளவன்.