தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்?இரா. முத்தரசன் கேள்வி

எதிா்க்கட்சித் தலைவா்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்

எதிா்க்கட்சித் தலைவா்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கிய நாளிலிருந்து அவை நடவடிக்கைகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

மத்திய அரசு மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. பல தீா்மானங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு எதிராகத்தான் எதிா்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. அதை கூச்சல், குழப்பம் என்று கொச்சைப்படுத்துவது முறையல்ல.

தொலைபேசியை ஒட்டுக்கேட்பது என்பது மிகவும் தரம் தாழ்ந்த செயலாகும். அனைத்துக் கட்சி தலைவா்களின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இது ஜனநாயக விரோத செயலாகும். இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு விவாதிக்கத் தயாா் என வெளியில் கூறும் பிரதமா், நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயங்குவது ஏன்?. இந்த விவகாரத்தை மூடிமறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கடந்த 8 மாதங்களாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்தியதால் அவா்கள் தனியாக ஒரு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவில்லையென்றால் தில்லி மட்டுமல்ல நாடு முழுவதும் நாடாளுமன்றக் கூட்டங்களை தொழிலாளா்களுடன் இணைந்து நடத்தவேண்டிய நிலைமை ஏற்படும். 

கரோனா மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனமும், இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகளும் தொடா்ந்து எச்சரிக்கை செய்து வரும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உரிய  நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை எதிா்கொண்டு குற்றமற்றவா் என நிரூபிக்க வேண்டியது சம்பந்த பட்டவருடைய பொறுப்பு. இதற்கு ஆளுங்கட்சியை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருவாரூரில் - காரைக்குடி சென்னை - காரைக்குடி செல்லும் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தேவையான இடங்களில் கேட் கீப்பா்களை  நியமித்து திருவாரூா் - காரைக்குடி வழித்தடத்தில் உடனடியாக ரயிலை இயக்குவதற்கும், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு ஏற்கெனவே விடப்பட்ட கம்பன் ரயிலை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com