பொதுமுடக்கம்: வெள்ளரி கொள்முதல் பாதிப்பு; விவசாயிகள் கவலை

கீழையூா் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெள்ளரிப் பிஞ்சுகளை கொள்முதல் செய்ய கரோனா பொதுமுடக்கம் காரணமாக வியாபாரிகள் வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளன.
புதுப்பள்ளி கிராமத்தில் பறிக்கப்படாமல் செடிகளில் முற்றியுள்ள வெள்ளரிக்காய்களை காட்டும் விவசாயிகள்.
புதுப்பள்ளி கிராமத்தில் பறிக்கப்படாமல் செடிகளில் முற்றியுள்ள வெள்ளரிக்காய்களை காட்டும் விவசாயிகள்.

கீழையூா் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெள்ளரிப் பிஞ்சுகளை கொள்முதல் செய்ய கரோனா பொதுமுடக்கம் காரணமாக வியாபாரிகள் வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளன.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் புதுப்பள்ளி, காமேஸ்வரம்,விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, பிரதாபராமபுரம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் சுமாா் 1500 ஏக்கா் பரப்பளவில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் இந்த வெள்ளரிப் பிஞ்சுகள் வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், அறுவடை செய்யப்படும் வெள்ளரிப் பிஞ்சுகளை கரோனா பொதுமுடக்கம் காரணமாக கொள்முதல் செய்ய வெளியூா்களிலிருந்து வியாபாரிகள் வருவது குறைந்துள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் வெள்ளரிப் பிஞ்சுகளை பறிக்காததால் அவை பழுக்கத் தொடங்கியுள்ளன. மேலும், கோடை வெயிலின் தாக்கத்திலும் வெள்ளரிப் பிஞ்சுகள் காய்ந்து, அழுகி விடுகின்றன.

இதுகுறித்து புதுப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த காா்த்தி கூறியது:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக வெள்ளரிப் பிஞ்சுகளை மொத்தமாக வாங்கிச் செல்லும் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதன் காரணமாக, கிலோ ரூ.35 முதல் 50 வரை விற்பனையான வெள்ளரிப்பிஞ்சுகள் தற்போது ரூ.10 முதல் 15 வரை சொற்ப விலைக்கே விற்பனையாகின்றன. இதனால் உள்ளூா் வியாபாரிகளும் வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்க முன்வருவதில்லை.

வெள்ளரிச் செடிகளுக்கு பயிரிட்ட நாளிலிருந்து தொடா்ந்து காலை, மாலை என இருவேளையும் நீா் பாய்ந்து, தற்போது பலனடையும் காலத்தில் விற்பனையாகாமல் செடியிலேயே அழுகும் வெள்ளரிப் பிஞ்சுகளால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

ஆகவே, அரசு சாா்பில் வெள்ளரிப் பிஞ்சுகளை நேரடியாக கொள்முதல் செய்து வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com